Published:Updated:

துரத்தி துரத்தி படம்பிடித்த ட்ரோன்; தெறித்து ஓடிய இளைஞர்கள்! -ட்ரெண்டிங்கில் திருப்பூர் போலீஸ் #Video

ட்ரோனைப் பார்த்து தெறித்து ஓடும் இளைஞர்கள்
ட்ரோனைப் பார்த்து தெறித்து ஓடும் இளைஞர்கள்

திருப்பூர் போலீஸார் கையிலெடுத்திருக்கும் புது டிஸைனான ட்ரோன் விளையாட்டு வொர்க்கவுட் ஆனதோடு, வேற லெவலில் வைரலாகியும் வருகிறது.

`ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது’ என அரசும் போலீஸாரும் தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் பொதுமக்கள் பலரும் சாலைகளில் சுற்றுத் திரிந்த வண்ணம்தான் இருக்கின்றனர். அதிலும், கிரிக்கெட் விளையாடுவது, பைக் ரவுண்ட்ஸ் போவது என இளைஞர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவேயில்லை. லத்தியைச் சுழற்றி, தோப்புக்கரணம் போட வைத்து, திருக்குறள் சொல்லச் சொல்லி போலீஸாரும் விதவிதமான ட்ரீட்மென்ட்களை செய்துவருகின்றனர். எதுவும் பலனளிக்கவில்லை. இதற்கிடையே திருப்பூர் போலீஸார் கையிலெடுத்திருக்கும் புது டிஸைனான ட்ரோன் விளையாட்டு வொர்க்கவுட் ஆனதோடு, வேற லெவலில் வைரலாகியும் வருகிறது.

ட்ரோன் கண்காணிப்பில் போலீஸார்
ட்ரோன் கண்காணிப்பில் போலீஸார்

திருப்பூர் போலீஸார் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ 1.47 நிமிடம் ஓடுகிறது. வீடியோவைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அதை ரிப்பீட் மோடில் ஓடவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பொட்டல் காட்டுக்கு நடுவே மரத்தடியில் 7 - 8 இளைஞர்கள் கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அந்தச் சமயம் பார்த்து அங்கு ஒரு ட்ரோன் நுழைகிறது. நம்மைக் கண்காணிக்க போலீஸார் அனுப்பியிருக்கும் ட்ரோன்தான் இது என்பதை உணர்ந்த இளைஞர்கள் நொடிப்பொழுதில் நாலாபுறமும் சிதறி ஓடுகின்றனர். இடையே, `டேய் தம்பி மாட்டைப் புடிக்கக் கூடாதுன்னா கேக்க மாட்டியா! சூப்பரு நொறுக்குதே... நொறுக்குதே’ என ஜல்லிக்கட்டு கமென்ட்ரி வாய்ஸ் வேறு. ஒரு இளைஞர் கேரம் போர்டை தூக்கிக்கொண்டு ஓட, அவரை ட்ரோன் விரட்டி விரட்டி படம் பிடிக்கிறது. தன்னுடைய முகம் வீடியோவில் பதிவாகிவிடக் கூடாது என அந்த இளைஞர் கேரம் போர்டால் அவரது முகத்தை மறைக்க முடியாமல் திணறிப்போய், கடைசியில் கட்டியிருந்த லுங்கி கழன்று போகும் அளவுக்கு ஓட்டம் பிடிக்கிறார்.

துரத்தி துரத்தி படம்பிடித்த ட்ரோன்; தெறித்து ஓடிய இளைஞர்கள்! -ட்ரெண்டிங்கில் திருப்பூர் போலீஸ் #Video

போலீஸாரின் அட்டகாசமான க்ரியேட்டிவிட்டியில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ, ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கு செம என்டர்டெய்ன்மென்ட் கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து திருப்பூர் மாநகர துணை கமிஷனர் பத்ரி நாராயணன் அவர்களிடம் பேசினோம். ``போலீஸாரே எல்லா இடத்துக்குப் போயும் கண்காணிக்க முடியாது. இருக்கிற டெக்னாலஜியை எப்படி யூஸ் பண்ணலாம்னு நினைச்சோம். நாம போகாத இடத்துக்கும் ட்ரோனை அனுப்பலாம்னு முடிவு செஞ்சு அதை கையில எடுத்தோம். கள நிலவரம் என்னன்னு தெரிஞ்சிக்கவும் போலீஸ் கண்காணிப்பு இருக்குன்னு மக்களுக்குத் தெரியப்படுத்தவும்தான் இதை செய்றோம். அப்படி வழக்கம்போலத்தான் கண்காணிப்புக்காக கேமராவை விட்டோம். அதைப் பார்த்து கேஸ் போட்டுடுவாங்கன்னு பசங்களா பயந்து ஓடிட்டாங்க.

மற்றபடி பசங்க பயந்து ஓடணும்னு நாங்க கேமராவை விடலை. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் நாலு போலீஸார் கொண்ட ஒரு சோஷியல் மீடியா டீம் எங்ககிட்ட இருக்கு. அவங்கதான் இப்படியான வீடியோ, மீம்ஸ் போன்றவற்றை செய்றாங்க. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர தேவையில்லாம வெளிய வராம, எங்களுக்கு மக்கள் சப்போர்ட் பண்ணா நல்லா இருக்கும்” என்றார்.

திருப்பூர் மக்களின் கவனத்திற்கு... திருப்பூர் சிட்டியில் இதுமாதிரி ரெண்டு ட்ரோன் எப்பவும் ரவுண்ட்ஸ்லயே இருக்காம்.

அடுத்த கட்டுரைக்கு