Published:Updated:

`என் மகள் தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல!' - வரதட்சணைக் கொடுமைக்கு பலியானாரா இளம்பெண்?

``எங்க பொண்ணு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குக் கோழை கிடையாது. நிச்சயமா தற்கொலை பண்ணியிருக்க மாட்டா. அவளோட புருஷனும், மாமனார், மாமியாரும் சேர்ந்துதான் ஏதோ செஞ்சிருக்காங்க." - இலக்கியாவின் பெற்றோர்

திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்ணாதுரை - மீனாகுமாரி தம்பதி. இவர்களின் மூத்த மகள் இலக்கியா (27). இவரை கோவை சிவானந்தபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவருக்கு கடந்த ஆண்டு மே 27-ம் தேதி திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணத்தின் போதே ராம்குமார் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டுள்ளனர். பெண் புகுந்த வீட்டில் சந்தோஷமாக இருந்தால் போதும் என, இலக்கியாவின் பெற்றோரும் 100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி, ஒரு ஸ்கோடா கார் ஆகியவற்றைக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

ராம்குமார் டிகிரி படித்துள்ளதாகவும், ஃபோட்டோகிராஃபி கம்பெனி ஒன்றினை நடத்தி வருவதாகவும் சொல்லித்தான் இலக்கியாவைத் திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகுதான் ராம்குமார் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும், ஃபோட்டோகிராஃபராக மட்டுமே இருப்பதும் இலக்கியாவிற்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தெரியவந்திருக்கிறது. அப்போதே இலக்கியா மற்றும் அவரின் பெற்றோர் உடைந்து போயுள்ளனர்.

உயிரிழந்த இலக்கியா
உயிரிழந்த இலக்கியா

மேலும், திருமணத்திற்குப் பிறகு ராம்குமார், அவரின் அப்பா சரவணன் மற்றும் அம்மா ஜெயந்தி ஆகியோர் அடிக்கடி இலக்கியாவிடம் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்திருக்கின்றனர். இதையெல்லாம் தன் பெற்றோரிடம் சொல்லி இலக்கியா கண்ணீர் விட்டிருக்கிறார். `நீ கவலைப்படாதம்மா... உன் புகுந்த வீட்டுல என்ன கேக்குறாங்களோ அதை நாங்க செஞ்சு தர்றோம்’ எனக் கூறி, இலக்கியா கண்ணீர் சிந்திய போதெல்லாம் அவரின் பெற்றோர் பணத்தையும், நகையையும் வாரி வழங்கியுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர் இலக்கியா உறவினர்கள்.

இந்நிலையில், அக்டோபர் 9-ம் தேதி மதியம் சுமார் 2.30 மணியளவில் இலக்கியாவின் மாமனார் சரவணன், இலக்கியாவின் பெற்றோருக்கு ஃபோன் செய்து, `உங்க மக ஏதோ பண்ணிக்கிட்டா, உடனே வந்து பாருங்க!’ என்றிருக்கிறார். பெற்றோர் பதறியடித்துச் சென்று பார்த்தபோது, தூக்குக் கயிற்றில் துடிதுடித்து இறந்துபோன இலக்கியா சடலமாகக் கிடந்திருக்கிறார்.

மகளின் சடலத்தைப் பார்த்து கதறியழுத பெற்றோர், `எங்க பொண்ணு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு கோழை கிடையாது. நிச்சயமா என் பொண்ணு தற்கொலை பண்ணியிருக்க மாட்டா. அவளோட புருஷனும், மாமனார், மாமியாரும் சேர்ந்துதான் ஏதோ செஞ்சிருக்காங்க’ எனக் குற்றச்சாட்டை வைத்தனர்.

Death (Representational image)
Death (Representational image)
வரதட்சணை பிரச்னை: கர்ப்பிணி மனைவியை துண்டு துண்டாக வெட்டி புதைத்த கணவர்; பீகார் அதிர்ச்சி!

இதுகுறித்து இலக்கியாவின் குடும்பத்தாரிடம் பேசினோம். ``10 லட்ச ரூபாய் செலவு பண்ணி நிச்சயதார்த்தம் செஞ்சோம். கல்யாணத்தப்ப 6 கிலோ வெள்ளி, 100 பவுன் தங்கம், பைக், கார்னு மாப்பிள்ளை வீட்டுல கேட்டதை எல்லாம் முகம் மாறாம கொடுத்தோம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, பொண்ணும் மாப்பிள்ளையும் தனிக்குடித்தனம் போறாங்கனு சொல்லி 5 லட்ச ரூபாய் கேட்டாங்க. அதையும் கொடுத்தோம்.

கடந்த சில நாளா, `என் மாமியார், மாமனார் இன்னும் 5 லட்சம் வேணும்னு கேக்குறாங்க’னு இலக்கியா சொன்னா. எப்படியாவது ரெடி பண்ணித் தந்துடுறோம்னு சொன்னோம். அதுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியலை. எங்க புள்ளையை இப்படி பொணமா ஆக்கிட்டாங்க” என்றனர் கண்ணீர் பொங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இலக்கியா காந்திபுரத்துல ஃபேஷன் டிஸைனிங் படிச்சிட்டு இருந்தா. படிச்சு முடிச்சதும், `எனக்கு பொட்டீக் வெச்சுக் கொடுப்பா'னு அவங்க அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தா. அந்தளவுக்குத் தன்னம்பிக்கையான பொண்ணு, எப்படிங்க தூக்குல தொங்கியிருப்பா? வரதட்சணைக் கேட்டுக் கேட்டு எங்க புள்ளைய வாழ விடாம சாகடிச்சிட்டாங்க. இலக்கியா கழுத்துல, உடம்புலன்னு நிறைய இடத்துல ரத்தக் காயங்கள் இருக்கு. இது நிச்சயமா தற்கொலையே கிடையாது.

உயிரிழந்த இலக்கியா
உயிரிழந்த இலக்கியா
`வரதட்சணை பெறமாட்டோம்' உறுதிமொழி; மீறினால் பட்டதாரி சான்றிதழ் ரத்து! - கேரள பல்கலைக்கழகங்கள் அதிரடி

அவளே ஏதோ செஞ்சு கொன்னுட்டாங்க. ராம்குமார், அவர் அம்மா ஜெயந்தி, அப்பா சரவணனை விசாரிச்சு போலீஸார் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்கணும்” எனக் கண்ணீர் விட்டனர்.

இந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் கோவை இராமநாதபுரம் போலீஸாரிடம் பேசினோம். ``ஆர்.டி.ஓ ஆபீஸ்ல விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வரலை. அதற்குப் பின்னாடிதான் நடவடிக்கை எடுக்க முடியும்'’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு