Published:Updated:

1,88,708 பாட்டில்கள், 25,000 ஆடைகள்... பிளாஸ்டிக் மறுசுழற்சியில் கலக்கும் திருப்பூர் நிறுவனம்!

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் உருவான ஆடைகள்
பிளாஸ்டிக் மறுசுழற்சியில் உருவான ஆடைகள்

முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, அவற்றிலிருந்தே ஆடைகளைத் தயாரித்திருக்கின்றனர்.

பிளாஸ்டிக் என்னும் எமனை எப்படி ஒழிப்பது எனத் தெரியாமல் உலக நாடுகள் பலவும் கையைப் பிசைந்து நிற்கின்றன. தமிழ்நாட்டில்கூட பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தும், முற்றிலுமாக அதை ஒழிக்க முடியவில்லை. திரும்பும் இடங்களிலெல்லாம் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகளே மலைபோல் குவிந்துகிடக்கின்றன. இப்படியான சூழலில், பயன்படுத்தப்பட்ட 1,88,708 கூல்டிரிங்ஸ் பெட் பாட்டில்களில் இருந்து, டி-ஷர்ட்ஸ், ஷார்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் போன்ற ஆடைகளைச் செய்து அசத்தியிருக்கிறது திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனம் ஒன்று. இந்த ஆடைகள் தான், சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியை அலங்கரித்திருக்கின்றன.

நம் தலைமுறைக்கானது மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையினரின் வளத்தையும் நாம் சுரண்டி, மாசுபடுத்தி வருகிறோம். இதையெல்லாம் நாம்தானே சரிசெய்ய வேண்டும். இப்படியான முயற்சிகளை எடுக்கும்போது, இருக்கின்ற பிளாஸ்டிக் பொருள்களை மறு உருவாக்கம் செய்வதற்கான ஒரு வழி கிடைக்கும்.

திருப்பூர் சிட்கோ தொழில்பேட்டையில் இயங்கிவரும் ‘என்.சி ஜான் & சன்ஸ் (பி) லிமிடெட்’ என்ற நிறுவனம்தான் இப்படியோர் அசத்தலை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டுமென இப்படியான முயற்சிக்கு புள்ளி வைத்து ஆரம்பித்தது என்னவோ ‘டென்னிஸ் ஆஸ்திரேலியா’ அமைப்புதான்.

இந்த அமைப்பு, ‘ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்’ போட்டியில் பிளாஸ்டிக் மறுசுழற்சியால் செய்யப்பட்ட ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென முடிவெடுத்தது. அப்படியான தேடுதலில்தான் என்.சி ஜான் & சன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 1,88,708 பாட்டில்களை மறுசுழற்சிசெய்து, அவற்றிலிருந்து பெறப்பட்ட நூல்களைக் கொண்டு டி-ஷர்ட், ஷார்ட்ஸ், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் என 25 ஆயிரம் ஆடைகளைத் தயாரித்திருக்கின்றன. ஒவ்வோர் ஆடையிலும் அதைத் தயாரிக்க எத்தனை பாட்டில்கள் செலவாயின என்பதைக் குறிப்பிட்டு ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

சத்யநாராயணன்
சத்யநாராயணன்

இதுகுறித்து என்.சி.ஜான் & சன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் சத்யநாராயணனிடம் பேசினோம். “ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பந்து எடுக்கும் சிறுவர் - சிறுமியர் மற்றும் பணியாளர்கள் அணிவதற்காக, பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகள் வேண்டுமென டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பு எங்களிடம் கேட்டது. வழக்கமாக, பெட்ரோலியப் பொருள்களிலிருந்து உருவாகும் ‘வெர்ஜின் பாலியெஸ்டர்’ நூல்களில்தான் இப்படியான ஆடைகளைத் தயாரிப்போம். இது எளிதாகவும் கிடைக்கும். ஆனால், கூல்டிரிங்க்ஸ் பாட்டில் போன்றவற்றை மறுசுழற்சி செய்து, அவற்றிலிருந்து பாலியெஸ்டர் நூல் எடுப்பது இந்தியாவில் மிகவும் குறைவு.

இதற்காக, பிரத்யேகமாக கூல்டிரிங்க்ஸ் பெட் பாட்டில்களை மறுசுழற்சிசெய்து, அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட பாலியெஸ்டர் நூலை, தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோம். சூரத்தில் வைத்து அவற்றைத் துணியாக்கி, கலர் போட்டு திருப்பூர் கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட 6 மாத காலமாக இந்த தயாரிப்புப் பணி நடைபெற்று, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளுக்கென தரச்சான்று கொடுக்க, உலக அளவில் அமைப்புகள் இருக்கின்றன. அப்படியிருக்க, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து பாலியெஸ்டர் எடுத்துதான் ஆடைகள் செய்தோம் என பொய்யெல்லாம் சொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படி மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், மூங்கில் போன்றவற்றிலிருந்து பிரத்யேகமாக ஆடைகளைத் தயாரித்துவருகிறோம்.

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் உருவான ஆடைகள்
பிளாஸ்டிக் மறுசுழற்சியில் உருவான ஆடைகள்

நம் தலைமுறைக்கானது மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையினரின் வளத்தையும் நாம் சுரண்டி, மாசுபடுத்திவருகிறோம். இதையெல்லாம் நாம் தானே சரிசெய்ய வேண்டும். இப்படியான முயற்சிகளை எடுக்கும் போது, இருக்கின்ற பிளாஸ்டிக் பொருள்களை மறு உருவாக்கம் செய்வதற்கான ஒரு வழி கிடைக்கும். வெர்ஜின் பாலியெஸ்டர்களைவிட, மறுசுழற்சியால் கிடைக்கப்பெற்ற இந்த பாலியெஸ்டர் நூல்களின் விலை 30 சதவிகிதம் கூடுதலாக இருக்கும். ஆனால், இவை லாபத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பிளாஸ்டிக்கை ஒழிக்க நாங்கள் ஒரு சிறிய முயற்சி எடுத்திருக்கிறோம் என்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. அதுமட்டுமல்லாமல், நம் திருப்பூரில் உருவான ஆடைகள் ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு