Published:Updated:

திருப்பூர்: மின் வாரியத்துக்கு ரூ.23.67 கோடி கரன்ட் பில் பாக்கி! - ஷாக் கொடுக்கும் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.23.67 கோடி ரூபாய் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

டாலர் சிட்டியான திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் மட்டும் மாதம் சுமார் 5,000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. ஆனால், திருப்பூர் மாநகராட்சியோ மின் வாரியத்துக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 23.67 கோடியைக் கொடுக்க முடியாமல் கடனில் இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மண்டல அலுவலகம், சுகாதார மையங்கள், சமூகநலக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் திட்டங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற சுமார் 300 இணைப்புகளின் பயன்பாட்டுக்கு மின் வாரியம், மின் விநியோகம் செய்துவருகிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே

இதற்கான கட்டணத்தை, மின் பயன்பாடு கணக்கு எடுத்ததிலிருந்து, 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதுதான் வழக்கமான விதிமுறை. ஆனால், திருப்பூர் மாநகராட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ. 23.67 கோடி ரூபாய் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் பாக்கிவைத்திருக்கிறது.

`ரூ.7.70 லட்சம் தண்ணீர் தொட்டி சர்ச்சை...!’ - திருப்பூர் விவகாரத்தின் பின்னணி

``மின் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய பணத்தை எடுத்து, மாநகராட்சியின் மற்ற செலவுகளைச் செய்துவந்திருக்கிறார்கள். குடிநீர், தெருவிளக்கு போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கவனத்தில்கொண்டு பணத்தைக் கட்டாவிட்டாலும் மின் வாரியம் மின் இணைப்புகளைத் துண்டிக்காது என மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். குறுகியகாலத்தில் அசுர வளர்ச்சியடைந்த திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகள் மட்டுமல்லாமல், பனியன் கம்பெனிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிலிருந்தும் எக்கச்சக்கமான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. மக்களிடம் கறார் காட்டி வரி வசூல் செய்யும் மாநகராட்சி, பனியன் நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை வசூலிக்கிறதா எனத் தெரியவில்லை. இதைச் சரியாகச் செய்தாலே பிரச்னை ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சியும் வைத்திருக்காத அளவுக்கு 23 கோடி ரூபாய் கடனை திருப்பூர் மாநகராட்சி வைத்திருக்கிறது” என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

திருப்பூர் டாலர் சிட்டி
திருப்பூர் டாலர் சிட்டி

இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் அவர்களிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். ``கொரோனா சூழலால் மக்களிடமிருந்து வீட்டு வரி, தண்ணீர் வரி, பாதாளச் சாக்கடை வரி, சொத்து வரி என மாநகராட்சிக்கு வர வேண்டிய 150 கோடி ரூபாயை வசூல் செய்ய முடியவில்லை. கொரோனா சூழலில் பொது மக்களைச் சிரமப்படுத்தக் கூடாது என மக்களிடம் கறாராக வரி வசூல் செய்யவில்லை. மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்களிலிருந்து கிடைக்கும் கேளிக்கை வரி போன்றவற்றிலிருந்தும் வருமானம் இல்லை. இப்படி மாநகராட்சிக்கான நிதி ஆதாரங்கள் முழுவதும் குறைந்து போயிருக்கின்றன” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு கொடுத்தது போக, மாநகராட்சிப் பணம் சுமார் 5 கோடியை செலவு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் நியூ திருப்பூர் குடிநீர்த் திட்டத்தில் 1,000 லிட்டர் குடிநீரை ரூ.26.50-க்கு வாங்கி, பொதுமக்களுக்கு அதை ரூ.4.50 என்ற விலையில் கொடுக்கிறோம். இத்தகைய காரணங்களால்தான் மாநகராட்சியின் நிதி நிலைமை கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. நிதி நிலைமை சரியானதும், வரி வசூல் செய்து 2021 மார்ச் மாதத்துக்குள் மின் வாரியத்துக்கு பாக்கிவைத்திருக்கும் பணத்தைச் செலுத்திவிடுவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு