Published:Updated:

திருவள்ளூர்: `6 மாதங்களில் 11,389 கிலோ பறிமுதல்; தகவலுக்கு சன்மானம்' - குட்கா தடுப்பு நடவடிக்கை

குட்கா
குட்கா

ஆந்திரா வழியாக வட மாநிலங்களிலிருந்து கடத்திவரப்படும் குட்கா பொருள்கள் கும்மிடிப்பூண்டி வழியாக திருவள்ளூர், சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் 2013-ம் ஆண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தடைவிதித்தார். இருப்பினும், தற்போது வரையிலும் தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது குறித்து, கடந்த ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியாகியிருந்தது.

தமிழகத்தில் குட்கா விற்பனை படுஜோராக நடந்துகொண்டிருப்பதை ஜூ.வி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இன்னும் இரண்டிலிருந்து மூன்று மாதங்களில் குட்கா விற்பனையையும் கடத்தலையும் முழுமையாகத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

ஜூ.வி செய்தி எதிரொலி: ``இரண்டு மாதங்களில் குட்கா இல்லாத தமிழ்நாடு!'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அதையடுத்து, மாநில சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். சென்னையில் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் நேற்றைய தினம் முதல் அந்தந்தப் பகுதி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல், பகுதிவாரியாக வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து, `தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றும் போலீஸார் எச்சரித்துவருகின்றனர்.

அமைச்சரின் ஊடக சந்திப்புக்குப் பிறகு, போலீஸார் குட்கா விவகாரத்தில் தனி கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். நேற்றைய தினம் சைதாப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீஸார் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சரக்கு வாகனம் ஒன்றில் கடத்திவரப்பட்ட 345 கிலோ குட்கா மற்றும் போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்திருக்கும் போலீஸார் மூன்று பேரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை குறித்த பத்திரிகைச் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழக தலைநகர் சென்னையின் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. ஆந்திரா வழியாக வட மாநிலங்களிலிருந்து கடத்திவரப்படும் குட்கா பொருள்கள் கும்மிடிப்பூண்டி வழியாக திருவள்ளூர், சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், குட்கா விற்பனையையும் கடத்தலையும் ஒழிக்க திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார்.

குட்கா விற்பனை குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்திக் குறிப்பில்,``திருவள்ளூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த 01.01.2021 முதல் 22.07.2021 வரை குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 155 நபர்களின் மீது 135 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சுமார் 86,70,382 ரூபாய் மதிப்பிலான 11,389 கிலோ புகையிலைப் பொருள்களும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர்
திருவள்ளூர்

தற்போது, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யப்படுவதை அறவே ஒழிக்கும் பொருட்டு, இவ்வகையான செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து உரிய நடவடிக்கையெடுக்க பிரத்யேகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. எனினும், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவது தெரிந்தால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு 63799 04848 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து, இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து இளம் தலைமுறையினரைக் காப்பாற்ற, காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு புகையிலை இல்லா சமுதாயத்தை உருவாக்க உதவுமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தகவல் தருபவர்களின் அடையாளம் காக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தக்க சன்மானமும் வழங்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குட்கா வழக்கு: என்ன ஆச்சு?
எங்கும் நிலுவை... எதிலும் நிலுவை!
அடுத்த கட்டுரைக்கு