Published:Updated:

`ட்ரோன் கேமராவில் சிக்கிய திருவள்ளூர் காதல் ஜோடி' - போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த தைல மரக்காடு

ட்ரோன் கேமராவில் சிக்கிய காதல் ஜோடி
ட்ரோன் கேமராவில் சிக்கிய காதல் ஜோடி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பட்டுபள்ளி கிராமத்தில், ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இருப்பினும், 144 தடை உத்தரவை மதிக்காதவர்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் ஒன்றாகச் சேர்ந்து பொழுதைப் போக்கிவருகின்றனர். அவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் கண்காணித்துவருகின்றனர். ட்ரோன் கேமராவில் சிக்குபவர்களை போலீஸார் எச்சரித்துவருகின்றனர்.

`ட்ரோன்' மூலம் கிருமி நாசினி; 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்? - அரசு மருத்துவமனைகளில் அதிரடி #Corona
தைலமரத்தோப்பு பகுதி
தைலமரத்தோப்பு பகுதி

இந்த நிலையில், ட்ரோன் கேமராவில் சிக்குபவர்களின் வீடியோ, இணையதளத்தில் வைரலாகிவருகிறது. ஆளில்லாத காட்டுப்பகுதியில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ட்ரோன் கேமராவில் சிக்கியதும், அவர்கள் நடிகர் வடிவேலைப் போல மின்னல் வேகத்தில் ஓடும் காட்சிகளும் பதிவாகின. இன்னும் சிலர், ட்ரோன் கேமராவில் முகங்கள் சிக்காமலிருக்க துணியால் மறைத்துக்கொண்டனர். மேலும் சிலர், மறைவான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் சர்வசாதாரணமாக மக்கள் நடமாட்டம் உள்ளது. அதைத் தடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸார், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். போலீஸாரின் ட்ரோன் கேமராவில் சாராயம் காய்ச்சுவது தொடங்கி, ஏரிப் பகுதியில் கிரிக்கெட், உற்சாகக் குளியல் போட்டவர்கள் வரை சிக்கினர்.

தைலமரத்தோப்பு
தைலமரத்தோப்பு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பட்டுபள்ளி கிராமம் அருகே உள்ள தைலமரக்காடு பகுதியில், சுட்டெரிக்கும் வெயிலில் ட்ரோன் கேமராவைப் போலீஸார் பறக்கவிட்டனர். ட்ரோன் கேமராவைப் பார்த்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போது, மரத்துக்கு கீழ்பகுதியில் காதல் ஜோடி ஒன்று அமர்ந்திருந்தது. அவர்களும் ட்ரோன் கேமராவில் பதிவாகினர். அதைப் பார்த்ததும் போலீஸார் காதல் ஜோடியின் அருகே ட்ரோன் கேமராவை இயக்கினர். உடனே காதல் ஜோடி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. அருகில் நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் பறந்தனர். அப்போது, துப்பட்டாவால் அந்தப் பெண் முகத்தை மூடியிருந்தார். காதலன், ஹெல்மெட்டால் முகத்தை மூடிக்கொண்டார். பைக்கில் மின்னல் வேகத்தில் சென்ற காதல் ஜோடியை ட்ரோன் கேமராவும் சிறிது தூரம் விரட்டிச்சென்றது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸார் கூறுகையில், ``ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம். அதனால் ஓரளவு வீட்டை விட்டு மக்கள் வெளியில் வருவது குறைந்துள்ளது. இருப்பினும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று சிலர் பொழுதைப் போக்கிவருகின்றனர். அதற்காகத்தான் ட்ரோன் கேமரா மூலம் அவர்களைக் கண்காணித்துவருகிறோம். நேற்று மதியம், ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தபோது ஒரு காதல் ஜோடி சிக்கியது.

தைலமரத்தோப்பில் காதல் ஜோடி
தைலமரத்தோப்பில் காதல் ஜோடி

அவர்கள் யாரென்று பைக்கின் பதிவு நம்பர் மூலம் கண்டறிந்துவருகிறோம். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு