Published:Updated:

திருவண்ணாமலையை மிரட்டும் டெங்கு! - 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சோகம்

திருவண்ணாமலை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா
மோனிஷா

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளி. இவரின் மகள் மோனிஷா (3). கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மோனிஷாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்படவே, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், மோனிஷாவுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, தானிப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மோனிஷாவுக்கு காய்ச்சல் தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு, தனி வார்டில் வைத்து தீவிரமாகச் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மோனிஷா இறந்துபோனார்.

2018-ம் ஆண்டு கலெக்டர் ஆய்வு செய்தது.(கோப்பு படம்)
2018-ம் ஆண்டு கலெக்டர் ஆய்வு செய்தது.(கோப்பு படம்)

இதுபற்றி தலைமை மருத்துவர்கள் கூறுகையில், ``ஆபத்தான நிலையிலேயே அரசு மருத்துவமனைக்கு வருகின்றார்கள். காய்ச்சல் ஆரம்ப நிலையிலேயே இங்கு வந்தால் சுலபமாகக் குணப்படுத்திவிடலாம். ஆனால், அதைச் செய்வதில்லை. பெரும்பாலானோர் காய்ச்சலுக்கு ரத்தப் பரிசோதனையே செய்யாமல் ஊசி போட்டுக்கொள்கின்றனர். அது மிகவும் தவறு. டெங்குக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் எக்காரணம் கொண்டும் ஊசி போட்டுக்கொள்ளக் கூடாது. இதை அறியாமையால் பொதுமக்கள் ஊசி போட வற்புறுத்துகிறார்கள். அரசு மருத்துவமனையைப் புறக்கணித்து தனியார் மருத்துவர்களிடம் செல்கிறார்கள். அவர்கள் ஊசி போடுவதால் தட்டணுக்கள் சிதைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுக் காய்ச்சல் தீவிரமடைகிறது. இதுதான் உயிரிழப்புக்கும் வழி வகுக்கிறது” என்றார்கள்.

குழந்தை மோனிஷா உயிரிழந்ததையடுத்து, அவர்களது உறவினர்கள் தானிப்படியில் மறியல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``எங்கள் ஊர் சுத்தமில்லாமல் சாக்கடையாக இருக்கிறது. இதை அரசு கண்டுகொள்வதே இல்லை. ஊராட்சி செயலாளர் எங்கள் ஏரியா பக்கமே வருவது இல்லை.

`டெங்கு அறிகுறி இருந்தால் ஊசி போடாதீங்க!'- பெற்றோர்களுக்கு வேலூர் அரசு டாக்டர் அட்வைஸ்

சாத்தனூர் அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் வருகிறது. அந்தத் தண்ணீரைச் சுத்திகரிப்பதே கிடையாது. சுத்திகரிக்கும் இயந்திரம் பழுதானதால் அப்படியே தண்ணீரை விநியோகம் செய்கிறனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து டெங்குவைக் கட்டுப்படுத்த வழிசெய்ய வேண்டும்” என்றனர்.