Published:Updated:

நீர் பாதுகாப்பில் அசத்தல் சாதனை! - தேசிய அளவிலான `ஸ்கோச் விருது' பெற்ற திருவண்ணாமலை

விருதை ஆட்சியரிடம் கொடுக்கும் திட்ட இயக்குநர் ஜெயசுதா
விருதை ஆட்சியரிடம் கொடுக்கும் திட்ட இயக்குநர் ஜெயசுதா

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய `ஸ்கோச் விருது - நீர்' (Skoch Award - Water) கிடைத்துள்ளது.

தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்றவற்றைச் சிறந்த முறையில் செயல்படுத்தியதால், `திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய `ஸ்கோச் விருது - நீர்' (Skoch Award - Water) கிடைத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ``திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் (நீர் மேலாண்மை இயக்கம்) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நமது மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு 11.2 மீட்டரில் இருந்தது. தற்போது 3.4 மீட்டராக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள், கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், குட்டைகள், நீர்வரத்துக் கால்வாய்கள், பண்ணைக் குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், புனரமைப்புப் பணிகள், ஏரிகளில் மரம் நடும் பணிகள் என மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை - நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 1555 பணிகள் ரூ.44.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் `நீர் வங்கி’ (Water Bank) ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகத் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஏரிகள், குளங்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் வங்கியில் பதிவு செய்து அதன் மூலம் 672 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

Representational Image
Representational Image

மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளுக்கும் விளிம்பு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள மேடு, பள்ளம் பகுதிகள் கண்டறியப்பட்டு அதன் மூலம் நீர் சேமிப்புப் பணிகள் எளிதாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் விவசாயத்தில் நெல் சாகுபடிக்கு 85% நீர், கரும்பு சாகுபடிக்கு 75% நீர் தேவையாக உள்ளது. அரசு மூலம் சொட்டுநீர் பாசனம் கரும்பு விவசாயத்துக்கு 100% மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் 50-60% நீர் சேமிக்கப்பட்டு, இரண்டு போகம் விளைச்சல் கிடைக்கிறது. நெல் பயிர் செய்வதில் இயந்திர நடவு மேற்கொள்ளப்படுவதால் 25-30% மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களிலும் சொட்டுநீர்ப் பாசன முறையில் பப்பாளி, வாழை, தர்பூசணி போன்றவை பயிரிடப்பட்டு அதிக மகசூல் கிடைக்கப்பெற்றுள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ``நமது மாவட்டத்தில் நீர் மேலாண்மைக்காகச் செய்த பணிகளை வைத்து `ஸ்கோச்’ விருதுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. `நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்கு தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது. இது நமது மாவட்டத்துக்குப் பெருமைக்குரிய விஷயமாகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் பொதுமக்கள், விவசாயிகளுக்குப் பெரிய ஊக்கம் தரும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்
மாணவர்கள்

மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு துளி நீரும் பாதுகாக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 1,040 மி.மீட்டர் மழையும், 2015-ம் ஆண்டு 1,400 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தும், நிலத்தடி நீர்மட்டம் 14 மீட்டருக்குக் கீழ்தான் இருந்தது. தற்போது, மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் 3.4 மீட்டராக உயர்ந்துள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு