Published:Updated:

`போலீஸுல சொன்னேன்; வீட்டைச் சூறையாடிட்டாங்க!’ கள்ளச்சாரய கும்பலால் பஞ்சாயத்து தலைவருக்கு நேர்ந்த கதி

நாகராஜன்
நாகராஜன்

கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸுக்குத் தகவல் கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது கள்ளச்சாராயக் கும்பல். அதோடு அவரது வீட்டையும் சூறையாடி இருக்கிறது அந்தக் கும்பல்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர், தனது கூட்டாளிகள் 10 பேரோடு சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி கிராமத்திற்குள் விற்பனை செய்வதாகவும், இதனால் வெளியாட்கள் கிராமத்திற்குள் வருவதாகவும் பஞ்சாயத்துத் தலைவர் நாகராஜனிடம் புகார் கூறியிருக்கிறார்கள் கிராம மக்கள். உடனே நாகராஜன், போளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். புகார் கொடுத்த தகவல் எப்படியோ குமாருக்குத் தெரியவர, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகராஜன் வீட்டைச் சூறையாடியுள்ளனர்.

வீடு சூறை
வீடு சூறை

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜனிடம் பேசினோம்.``குமார் எனக்கு போன் செய்து, `சாராயம் காய்ச்சினதா எதுக்குடா போலீஸ்கிட்ட போட்டுக் கொடுத்த? நீ அங்க என்னென்ன சொன்னேனு, எல்லாம் எனக்கு ஒரு போலீஸ்காரர் தகவல் கொடுத்துவிட்டார். உன்ன என்ன பண்றேன் பாருடா’ என்று என்னை மிரட்டிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார். நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து என்னுடைய வீட்டிற்குச் சென்று என்னுடைய அப்பா அம்மாவைத் தாக்கிவிட்டு வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் கீழே தூக்கிப்போட்டு உடைத்துள்ளார்கள். தகவல் கிடைத்து நான் வீட்டிற்குச் சென்றதும் என்னையும் தாக்கினார்கள். நான் தற்காப்புக்காக வீட்டிலிருந்த கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டேன். அதனை வீடியோ எடுத்து போலீஸாருக்கு அனுப்பி என் மீதே கேஸ் போடுகிறார்கள். சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அந்தத் தகவலைச் சம்பந்தப்பட்ட ஆட்களிடமே போலீஸ் சொல்கிறது.

அதுமட்டுமன்றி, என் வீடு சூறையாடியதற்கு நான் புகார் கொடுத்தால் என்னுடைய புகாரை ஏற்க மறுக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்களுக்கு சப்போர்ட் செய்கிறது போலீஸ். ஊராட்சி மன்றத் தலைவருக்கே இதுபோன்ற நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை யோசிக்கவேண்டும்’’ என்றார்.

கும்பல்
கும்பல்

இதுகுறித்து போளூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமாரிடம் கேட்டபோது,``ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் மிகைப்படுத்திக் கூறுகிறார். முன்விரோதம் காரணமாக குமாரும் அவருடன் இருந்தவர்களும் சாராயம் குடித்துவிட்டு நாகராஜனிடம் சண்டை போட்டுள்ளார்கள். சாராயம் எதுவும் காய்ச்சவில்லை. இருதரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருதப்பிலும் 6 பேரைக் கைது செய்துள்ளோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு