Published:Updated:

`மனம்விட்டுப் பேசினோம்; பெரும் கனவு புரிந்தது!' - மகனை நீட் தேர்வுக்கு அனுப்பாத பெற்றோர்

மேதா சங்கர் தனது பெற்றோருடன்
News
மேதா சங்கர் தனது பெற்றோருடன்

`இதனால்தான் நீட் வேண்டாம் போடானு சொல்லிட்டேன். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க எடுத்த இந்த முடிவைப் பார்த்து, எங்களோட உறவினர்கள் நண்பர்களெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டாங்க.’

தங்கள் மகனை மருத்துவராக்கிப் பார்ப்பதுதான் வாழ்நாள் கனவு என்ற லட்சியத்துடன் இருந்த ஒரு பெற்றோர், மகனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நீட் தேர்வுக்கு அனுப்பாதது, பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் குவித்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த தம்பதியர் முனைவர் மணி கணேசன் - அமுதா. இருவருமே பள்ளி ஆசிரியர்கள். இவர்களின் மகன் மேதா சங்கர் ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதோடு, நீட் தேர்வுக்கான பயிற்சியிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார். ஆனால், அவருக்குள் வேறோரு எதிர்காலக் கனவு இருந்திருக்கிறது. அந்த உணர்வுக்கு மதிப்பளித்தும், மகனின் தொலைநோக்குப் பார்வை மீது நம்பிக்கை கொண்டும் அவரை நீட் தேர்வுக்கு அனுப்பவில்லை, அவரின் பெற்றோர்.

மேதாசங்கர் பெற்றோர் மணி.கணேசன் -அமுதா
மேதாசங்கர் பெற்றோர் மணி.கணேசன் -அமுதா

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இந்தத் தேர்வுக்கான பயிற்சியின்போதே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இத்தேர்வில் வெற்றிபெற முடியாமல் போகும் மாணவர்களில் பலர் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். மருத்துவம் படிப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு சமூக கௌரவமாகக் கருதுவதே இதற்குக் காரணம். இந்த நிலையில்தான், மன்னார்குடியைச் சேர்ந்த மணி கணேசன் - அமுதா தம்பதியர், தன் மகனின் படிப்பு விஷயத்தில் அளித்த சுதந்திரம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ``நீட் வேண்டாம் போடா” என தங்கள் மகனுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள் இந்தத் தம்பதியர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து நம்மிடம் மிகுந்த மகிழ்ச்சியோடு பேசிய மணி.கணேசன்,``எங்க பையன் மேதா சங்கர் சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பான். அவனை டாக்டராக்கிப் பார்க்கணுங்கிறதுதான் எங்களோட பெரிய கனவு. ப்ளஸ் டூவுல 500 மார்க்குக்கு மேல எடுத்திருந்தான். ரொம்ப சந்தோஷப்பட்டோம். நீட் தேர்வுக்கான கோச்சிங் கிளாஸ் போனான். அதுக்கும் நல்லாத்தான் ஹார்டு வொர்க் பண்ணியிருந்தான். ஆனாலும், அவன் மனசுக்குள்ளார வேற ஏதோ ஒரு எண்ணம் ஓடிக்கிட்டு இருக்குறதை நாங்க உணர்ந்தோம்.

அவன்கிட்ட வெளிப்படையாக, மனம்விட்டுப் பேசினோம். அப்போதான் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்னு ஒரு படிப்பு இருக்குறதாகவும் அது உலகம் முழுவதும் வளர்ந்து வர்றதாகவும் அவன் சொன்னான். இந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்குனு நிறைய ஆதாரங்களோடும் நம்பிக்கையோடும் எடுத்துச் சொன்னான். அதனால் நீட் எக்ஸாம் எழுத தனக்கு விருப்பம் இல்லைனு சொன்னான்.

அவனோட ஆசைக்கு குறுக்கே நிற்க நாங்க விரும்பலை. எங்களோட கனவுங்கற பேர்ல, எம்.பி..பி.எஸ் ஆசையை அவன் மேல திணிக்க விரும்பலை. அவனுக்கு என்ன விருப்பமோ, அதை படிக்கட்டும்னு முடிவெடுத்தோம். நீட் தேர்வு முறையிலயும் எங்களுக்குக் கொஞ்சம் உடன்பாடு இல்லாமல்தான் இருந்துச்சு. அதனாலதான், `நீட் வேண்டாம் போடா’னு சொல்லிட்டேன். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க எடுத்த இந்த முடிவை பார்த்து, எங்களோட உறவினர்கள், நண்பர்களெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டாங்க.

நம்மால் நிறைவேற்ற முடியாத, நிறைவேறாத கனவுகளை பிள்ளைங்க மேல வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாது. நல்லவேளை சுதாரிச்சோம். முழு மனசோடு விருப்பமுள்ள படிப்பைப் படிச்சாதான், எங்க மகனோட வாழ்க்கை பிரகாசிக்கும். எதிர்காலத்துல நிறைய சாதிக்க முடியும். ஒருவேளை நீட் எக்ஸாம் எழுதி, பாஸ் பண்ண முடியாமல் போயிருந்தால், எங்க பையன் மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்பான். நல்லவேளையாப் போச்சு... சரியான தருணத்துல, பொறி தட்டின மாதிரி நல்ல முடிவெடுத்தோம்” என்று நம்பிக்கையுடன் பேசினார்.