Published:Updated:

திருவாரூர்: `கல்விப் பணி போலவே இதுவும் முக்கிய சேவை!’- பள்ளியில் பாரம்பரிய உணவு அங்காடி

பள்ளியில் இயற்கை அங்காடி
பள்ளியில் இயற்கை அங்காடி

``மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனசுல ஆரோக்கியமான உணவுகளை ஆழமாகப் பதிய வைக்கணும். இதையெல்லாம் நம்ம மக்கள் தேடிப் போயி வாங்கமாட்டாங்க’’.

பள்ளிக்கூடம் என்பது, கல்வியை மட்டும் போதித்தால் போதாது. மக்களின் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வையும் போதிக்க வேண்டும். கடந்தகால தலைமுறைகளில் நம்முடைய பள்ளிக்கூடங்கள் அப்படிதான் இருந்தன. ஆனால், காலப்போக்கில் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் இடமாக மட்டுமே மாறிப்போயின. இந்நிலையில்தான் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆரோக்கியமான உணவுப்பொருள்களை கொண்டு செல்லும் உன்னத நோக்கத்தோடு, திருவாரூரில் உள்ள ஒரு பிரபல பள்ளியின் வளாகத்தில் இயற்கை அங்காடி செயல்பட்டு வருகிறது.

பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள்
பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள்

`உணவே மருந்து; மருந்தே உணவு’ என வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். ஏராளமான சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டதால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள். மாப்பிள்ளை சம்பா, ஜீரக சம்பா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களும், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட இன்னும் ஏராளமான சிறுதானியங்களும் நம் முன்னோர்களின் வாழ்வில் அன்றாட உணவுப் பொருள்களாக இடம்பெற்று வந்தன.

ஆனால், தற்கால தலைமுறையில் உணவுப் பழக்கம் முற்றிலுமாக மாறிவிட்டது. பெரும்பாலும் ரசாயன நச்சுத்தன்மையுள்ள உணவுப்பொருள்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில்தான், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவுப்பொருள்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக திருவாரூரில் இயங்கும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயற்கை அங்காடி செயல்பட்டு வருகிறது.

மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சிகப்பு கவுனி, பூங்கார், இலுப்பைப்பூ சம்பா, ஜீரக சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள்... கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள்... சிறுதானியங்களில் செயல்பட்ட நூடுல்ஸ், சேமியா... மரச்செக்கு எண்ணெய், உடன்குடி கருப்பட்டி, தேன் உள்ளிட்டவைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இது திருவாரூர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

16 வயதில் இயற்கை விவசாயம்... 23 வயதில் கேரளத்தின் முன்மாதிரி இளைஞர்- சாதித்த சூரஜ்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளி நிர்வாகி தியாக பாரி,``வியாபார நோக்கத்துல இதை நாங்க தொடங்கலை. பழமையும் பாரம்பரியமான உணவும்தான், மக்களை மகிழ்ச்சியோடும் ஆரோக்கியமாகவும் வாழ வைக்கும். இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருள்களை, பெற்றோர்கள்கிட்டயும், பொதுமக்கள்க்கிட்டயும் கொண்டு செல்லணுங்கறதுதான் எங்களோட முதன்மையான நோக்கம். இதனால், இயற்கை விவசாயிகளுக்கும் சந்தை வாய்ப்பு கிடைக்குது.

தியாக பாரி
தியாக பாரி

பொதுவாக, டிபார்மெண்ட் ஸ்டோர்கள்லயும், மற்ற இயற்கை அங்காடிகள்லயும் ஆர்கானிக் உணவுப்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுது. இதனால் இதை சாமான்ய மக்கள் எளிதாக வாங்கி சாப்பிட முடியாத நிலை உள்ளது. இந்த நிலையை மத்தணும்னுங்கறதுக்காகதான், குறைவான விலையில விற்பனை செய்றோம்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மணசுல ஆரோக்கியமான உணவுகளை ஆழமாகப் பதிய வைக்கணும். இதையெல்லாம், நம்ம மக்கள் தேடிப் போயி வாங்கமாட்டாங்க. எளிதாகக் கண்ணுல பட்டால்தான் இதை வாங்கணுங்கற எண்ணமே அவங்களுக்கு வரும். அதனால்தான் இந்த முயற்சி. விடுமுறை நாள்கள்ல இயற்கை அங்காடி செயல்படும். கல்விப் பணி போலவே, இதையும் நாங்க ஒரு முக்கிய சேவையாக நினைக்குறோம்”என நெகிழ்ச்சியோடு பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு