Published:Updated:

`100 நாள் வேலைத்திட்டம், எங்க வளர்ச்சிக்கான முதல்படி!’ - திருவாரூர் திருநங்கை அவந்திகா நம்பிக்கை

திருநங்கைகள்
திருநங்கைகள்

திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக மூன்று திருநங்கைகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் திருநங்கை அவந்திகாவிடம் இதுபற்றி பேசினோம்.``ஒடுக்கப்பட்ட எங்க சமுதாயத்திலிருந்து நாங்க சாதிக்கணும்னு ஆசை. தினமும் கடை வாசலுக்குப் போறோம். அங்க ஒரு சில திருநங்கைகள் தப்பா நடந்துக்கிறனால, எல்லாரையும் தப்பாவே பார்க்கிறாங்க. நாங்களும் எத்தனை நாளுக்குத்தான் வசூலுக்குப் போறது. கைதட்டி காசு கேட்டா, மேலயும் கீழேயும் பாக்குறாங்க. இப்ப வயசுருக்குது, அழகு இருக்குதுனு வசூலுக்குப் போக முடியுது. வயசானதுக்கு அப்புறம் என்ன பண்ணுறது? அதனாலதான் வேலைபாத்து எங்களை மாதிரி இருக்குற மத்தவங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கணும்னு ஆசைப்பட்டோம்.

Representation Image
Representation Image

படிப்பு, மற்ற விஷயங்களிலும் திருநங்கைகள் சிறப்பா இருந்தாலும், எங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கத்தால எந்தப் பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்க கடந்த 5 வருடங்களாக எல்லா திங்கள்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் போய் வேலைக்காகவும் இருப்பிடத்துக்காகவும் மனு கொடுத்துட்டு இருந்தோம். அவங்ககிட்ட இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனாலதான் நாங்க 100 நாள் வேலைத்திட்டம் மூலமா எங்கள் வளர்ச்சிக்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கோம்.

இதுக்கு முன்னாடி பல வங்கிகள் மூலம் தொழில் செய்ய கடன்பெற முயற்சி பண்ணினோம். எங்களோட வாழ்க்கைத் தரம் உயர எந்தத் தரப்பிலிருந்தும் எந்த உதவியும் கிடைக்கலை. சமுதாயத்தில் எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டி பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரிகளிலெல்லாம் போய் பேசினோம். அப்படியும் எந்த மாற்றமும் வரல. படிக்குற பசங்களுக்கு கூட திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாம இருக்குறது வருத்தமா இருக்குது.

திருநங்கைகள்
திருநங்கைகள்

நான் 11 வயசுல வீட்டை விட்டு வெளியேறி பாம்பே போனேன். அதுக்கப்புறம் பல ஊருக்கு மாறிமாறிப் போய் நிறைய கஷ்டப்பட்டுட்டேன். கடைசியா இனிமேல் இந்த ஊர்லதான்னு வாழ்றதுன்னு முடிவெடுத்து, இப்ப ஊராட்சி மன்றத் தலைவர் மூலமா 100 நாள் வேலை திட்டத்துல சேர்ந்திருக்கிறோம். கூடிய சீக்கிரமா அரசாங்கத்துல இருந்து வீட்டுமனையும் பெற்றுத் தர்றதா தலைவர் உறுதியளித்திருக்கிறார்" என்றார் மகிழ்ச்சியுடன்.

வடபாதிமங்கல ஊராட்சி மன்றத் தலைவரும், மன்னார்குடி கிழக்கு தி.மு.க செயலாளருமான சித்தரஞ்சனிடம் இது குறித்து கேட்டபோது, ``திருநங்கைகளுக்கும் இதர தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் அவர்களது முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்தவர் தலைவர் கலைஞர். அவரது வழியைப் பின்பற்றி வருவதனால் இவர்கள் 100 நாள் வேலைக்கான மனு கொடுத்ததும் பரிசீலனை செய்து, அதற்கான அட்டை வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்கான இருப்பிட வசதியும் கூடிய விரைவில் செய்து தருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்" என்றார். முதன்முதலாக திருநங்கைகள் வாழ்வாரத்துக்கு ஊராட்சி அளவில் உதவி செய்திருப்பது அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு