Published:Updated:

கொரோனாவில் மலர்ந்த மனிதநேயம் -அரசு அதிகாரியின் சடலத்தை தகனம் செய்ய உதவிய த.மு.மு.க-வினர் #Lockdown

சடலத்தை சுமந்து செல்லும் த.மு.மு.க-வினர்
சடலத்தை சுமந்து செல்லும் த.மு.மு.க-வினர்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் காலமானார். அவரின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டுசெல்ல மனிதநேயத்தோடு த.மு.மு.க-வினர் உதவினர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

``நஷ்டத்தை ஏத்துக்கிறேன்; 40 ரூபாய் பழம் 10 ரூபாய்தான்'' - பட்டதாரி விவசாயியின் மனிதநேயம்! #Video
சடலத்தை சுமந்த த.மு.மு.க-வினர்
சடலத்தை சுமந்த த.மு.மு.க-வினர்

கூட்டமாக மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமணம், இறப்பு மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் கொரோனாவால் ஒருவர் இறந்தால் அவரின் உறவினர்களுக்கு இறந்தவரின் முகத்தை கடைசி நேரத்தில் பார்க்கக்கூட அனுமதியில்லாத சூழல் உள்ளது. நிச்சயிக்கப்பட்ட திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் சென்னை அமைந்தகரை கலெக்டர் காலனி, கோவிந்தன் தெருவில் குடியிருந்தவர் ராமச்சந்திரன் (78). இவர் பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 11.4.2020-ம் தேதி அதிகாலையில் ராமச்சந்திரன், மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு 2 மகள்கள். ஒருவர் அமெரிக்காவில் உள்ளார். இன்னொருவர் சென்னையில் உள்ளார். ராமச்சந்திரனின் சொந்த ஊர் புதுக்கோட்டை.

கொரோனா தொற்று காரணமாக வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறோம்.
மாநில இளைஞரணி செயலாளர் ஷேக் முகமது அலி
சடலத்தை மின்மயானத்துக்கு கொண்டு சென்ற த.மு.மு.க-வினர்
சடலத்தை மின்மயானத்துக்கு கொண்டு சென்ற த.மு.மு.க-வினர்

ஊரடங்கு உத்தரவால் ராமச்சந்திரனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு உறவினர்கள் வரமுடியவில்லை. இந்தத் தகவல் தெரிந்ததும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் முகமதுஅலி, மாவட்ட துணைச் செயலாளர் தமீம் அன்சாரி, அண்ணா நகர் பகுதி தலைவர் முத்துமுகமது, பகுதிச் செயலாளர் சதாம் உசேன், பகுதி பொருளாளர் தமீம் அன்சாரி மற்றும் நிஜாமுதீன், ஜாகீர் உசேன் ஆகியோர் ராமச்சந்திரனின் வீட்டுக்குச் சென்றனர்.

ராமச்சந்திரனின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற த.மு.மு.க-வினர், அவரின் சடலத்தை அரும்பாக்கம் மின்மயானத்துக்குக் கொண்டுசென்று தகனம் செய்தனர். சோகத்திலும் த.மு.மு.க-வினரின் மனிதநேயச் செயல் அமைந்தகரை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷேக் முகமது அலியிடம் பேசினோம். ``கொரோனா தொற்று காரணமாக வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறோம்.

சடலத்தைச் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லும் தமுமுகவினர்
சடலத்தைச் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லும் தமுமுகவினர்

இந்தச் சமயத்தில்தான் சென்னை அமைந்தகரையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராமச்சந்திரனின் சடலத்தை தகனம் செய்ய த.மு.மு.க-வினர் உதவி செய்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் இறந்த ஆந்திர மாநில டாக்டரின் சடலத்தையும் எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த டாக்டரின் சடலத்தையும் தகனம் செய்ய த.மு.மு.க-வினர் உறுதுணையாக இருந்தனர்" என்றார்.

ராமச்சந்திரனின் இறுதி அஞ்சலியின்போது உதவிய மாவட்ட பொருளாளர் முகமதுஅலி கூறுகையில், ``ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ராமச்சந்திரன் குடியிருக்கும் தெருவுக்குப் பக்கத்தில்தான் த.மு.மு.க அலுவலகம் உள்ளது. நீண்ட காலமாக குடியிருந்த ராமச்சந்திரனை அந்தப்பகுதியைச் சேர்ந்த த.மு.மு.க நிர்வாகிகள் பலருக்கு நன்றாகத் தெரியும். ஊரடங்கு சமயத்தில் அவர் இறந்ததால் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உறவினர்கள் வர முடியவில்லை. இந்தத் தகவலை ராமச்சந்திரனின் மருமகன் மாணிக்கவாசகம் எங்களிடம் தெரிவித்ததும் நிர்வாகிகள் அங்கு சென்று உதவினோம். ராமச்சந்திரனின் சடலத்தை மயானத்துக்கு கொண்டு சென்றோம். அங்கு ஒரேயொரு ஊழியர் மட்டுமே பணியில் இருந்தார். உடனே அவருடன் சேர்ந்து நாங்களும் பணியாற்றினோம். இந்து முறைப்படி அனைத்துச் சடங்குகளையும் செய்தோம்" என்றார்.

மின்மயானத்தில் ராமச்சந்திரனின் சடலம்
மின்மயானத்தில் ராமச்சந்திரனின் சடலம்

இதுகுறித்து ராமச்சந்திரனின் மருமகன் மாணிக்கவாசகத்திடம் கேட்டதற்கு, ``சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் ராமச்சந்திரன் குடியிருந்ததால் எல்லோருக்கும் அவரை நன்றாகத் தெரியும். ஊரடங்கு சமயத்தில் அவர் இறந்ததால் அவரின் இறுதி அஞ்சலிக்கு உறவினர்கள், பொதுமக்களால் வர முடியவில்லை. த.மு.மு.க-வினர் செய்த உதவியை மறக்க முடியாது" என்றார்.

ராமச்சந்திரனின் சடலத்தை த.மு.மு.க-வினர் சுமந்து சென்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு