Published:Updated:

`14 இடங்களில் மிகக் கனமழை; 53 இடங்களில் கனமழை!' - தமிழகத்தில் தொடரும் மழை

மேலடுக்கு சுழற்சியில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

மழை
மழை

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை என பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்துவருகிறது. மழையால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இரவு முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

மழை
மழை

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைபொழிய வாய்ப்பிருக்கிறது. அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை ராமநாதபுரம், நெல்லை, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, ஈரோடு, கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழையும் கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

மழைப்பொழிவு

மழை
மழை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை 14 இடங்களில் மிகக் கனமழையும் 53 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச மழைப்பொழிவாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 செ.மீ மழையும் கடலூரில் 17 செ.மீ மழையும் நெல்லையில் 15 செ.மீ மழையும் காஞ்சிபுரத்தில் 13 செ.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்றுவரை 39 செ.மீ மழை பாதிவாகியிருக்கிறது. இது இயல்பைவிட 3 செ.மீ அதிகமாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மழை
மழை

லட்சத்தீவில் உருவாகியுள்ள குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது. அதனால், இன்று மீனவர்கள் குமரிக்கடல், லட்சத் தீவு, மாலத் தீவு பகுதிகளுக்கும் நாளை, லட்சத் தீவுப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

`தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்குக் கனமழை!’ - எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, 60 செ.மீ மழைப்பொழிவு இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், 51 செ.மீ மழைப் பொழிவு பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை சென்னையில் அதிகபட்சமாக காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் 12 செ.மீ மழை பாதிவானது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை தொடரவே வாய்ப்பிருக்கிறது.

மழை
மழை

பகல் நேரத்தில் மழை குறைவாகவும் இரவு நேரங்களில் அதிகமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. இரண்டு நாள்களுக்குப் பின்னர் 5 அல்லது 6 நாள்களுக்கு அதிக மழைப்பொழிவு இருக்காது. அதன்பின்னர், டிசம்பர் 15-ம் தேதிக்குப் பின்னர் மழைப்பொழிவு இருக்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் வழக்கமாக 67 செ.மீ மழைப்பொழிவு இருக்க வேண்டும். ஆனால், கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை அங்கு 81 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. இதுவே அதிகம். குமரிக் கடல் பகுதியில் மட்டும் கடல் சீற்றமாகக் காணப்படும். வங்கக் கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை'' என்றார்.

சென்னையில் மழை பாதிப்பு - உதவி எண்கள்

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. அதன்படி, 044-25384520, 25384530, 25384540 என்ற எண்களிலும் 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.