Published:Updated:

`3 வாரம் இதைச் செய்யுங்கள்; நம் அலுவலகங்கள் அழகாகும்!' - அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய இறையன்பு

இறையன்பு ஐ.ஏ.எஸ்

செலவில்லாமல் அரசு அலுவலகங்களை எழில்மிகு அலுவலகங்களாகச் செயல்படுத்த சில ஆலோசனைகளை முன்வைத்துள்ள இறையன்பு, அதனைத் தனது கைப்பட எழுதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.

`3 வாரம் இதைச் செய்யுங்கள்; நம் அலுவலகங்கள் அழகாகும்!' - அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய இறையன்பு

செலவில்லாமல் அரசு அலுவலகங்களை எழில்மிகு அலுவலகங்களாகச் செயல்படுத்த சில ஆலோசனைகளை முன்வைத்துள்ள இறையன்பு, அதனைத் தனது கைப்பட எழுதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.

Published:Updated:
இறையன்பு ஐ.ஏ.எஸ்

அரசு அலுவலகங்களை எழில்மிகு அலுவலகங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு. செலவில்லாமல் இதனைச் செயல்படுத்த சில ஆலோசனைகளை முன்வைத்துள்ள இறையன்பு, அதனைத் தனது கைப்பட எழுதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.

``அன்புள்ள அலுவலகத் தோழர்களே!" எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், ``நமக்கு அலுவலகம் என்றதுமே குவிந்து கிடக்கும் கோப்புகளும், உடைந்த நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் நாற்காலிகளும், பழுதடைந்த அலமாரிகளும், உபயோகமில்லாமல் கிடக்கும் கணினிகளும், நடந்து செல்லும்போதே துர்நாற்றம் வீசி மூக்கை பொத்த வைக்கின்ற கழிவறைகளும் பெரும்பாலும் நினைவுக்கு வருகின்றன. தூய்மையான அலுவலகம், நம் அலுவலகத்தை நேசிக்கத் தகுந்ததாக மாற்றும். நம் பணியைத் தென்றலாக்கும். கோப்புகளை மேசையிலிருந்து துள்ளிக் குதித்து ஓட வைக்கும். அத்தகைய `எழில்மிகு அரசு அலுவலகம்' என்ற சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய கடிதம்
இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய கடிதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் எளிமையானவை. பயனற்ற நாற்காலிகளை அப்புறப்படுத்த வேண்டும். உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றி ஏலம் விட வேண்டும். முடிவுற்ற கோப்புகளை முறைப்படி ஆவண அறைக்கோ, ஆவணக் காப்பகத்துக்கோ அனுப்பிக் கோப்புகள் குவிந்து கிடக்கும் சூழலை உருவாக்கக் கூடாது.

ஆவணக் காப்பகத்திலிருந்து பெறப்படும் கோப்புகள் துறை வசமே இருப்பது குறித்து 2011-ம் ஆண்டு ஆணையர், ஆவணக்காப்பகம் அரசுக்கு மடல் எழுதியுள்ளார். பயன்பாடு இல்லாத கணினிகளை முறையாகக் குழு அமைத்து முறைகேடு நிகழாவண்ணம் களைவதன் மூலம் அலுவலகம் பொலிவு பெறும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மின் கழிவுகளும் தக்க முறைகளைப் பின்பற்றி அகற்றப்பட வேண்டும். மேசையில் கோப்புகளை அழகாக அடுக்கி வைத்துப் பணியாற்றினால் பணிச் சூழலும் பண்பாடும் மேன்மை அடைய வாய்ப்புகள் அதிகம்.

அலுவலக சுகாதாரம் பேணுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு அவ்வப்போது கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதும் முக்கியம். தூய்மைப் பணியாளர்கள் மணிக்கு ஒருமுறை கழிவறைகளைச் சுத்திகரித்து அவை துர்நாற்றமின்றி விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளைப் போலத் திகழ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய கடிதம்
இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய கடிதம்

துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் வரும் பார்வையாளர்களுக்கு எனக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் தேவையின்றி தாழ்வாரங்களில் நடமாடிக் கொண்டிருப்பது தவிர்க்க வேண்டும். துறையின் தலைமை அதிகாரி தன் அறையோடு நின்று விடாமல் அவ்வப்போது தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தை ஆய்வு செய்து அலுவலகத் தூய்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

செலவின்றி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை மூன்று வாரங்கள் மட்டும் இடைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தினால் அது உடலின் ஒரு உறுப்பாகவே ஆகிவிடும். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்து எழில்மிகு அரசு அலுவலகம் என்கின்ற நோக்கத்தை அடையுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என முடியும் அந்தக் கடிதம், அனைத்து துறைச் செயலாளர்கள், அனைத்து துறை தலைமை அலுவலர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism