Published:Updated:

`144 தடை உத்தரவு; மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளுக்கு சீல்!’- முதல்வர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தொற்று நோய் சட்டம் 1897-ல் ஷரத்து 2-ன் படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். முதல்வர் பேசியதிலிருந்து, ``கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மட்டும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தொற்று நோய் சட்டம் 1897-ல் ஷரத்து 2-ன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இந்த உத்தரவானது நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொதுபோக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோக்கள், டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசியப் போக்குவரத்து தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

தமிழகம்
தமிழகம்

அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் இயங்காது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். இருப்பினும் தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்ற வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்பத் தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும். அதேபோல் அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்க வேண்டும்.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர பிற கட்டடப்பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் இந்த நாள்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்யக் கூடாது. பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாக தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். நோய் அறிகுறி வருகிறதா என மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

`மக்கள் முடக்கப்படுவதால் நோயைக் கட்டுப்படுத்த முடியுமா?!’ -கொரோனா பரவலுக்கு WHO விளக்கம்

தடை உத்தரவு காரணமாக முதியோர் மட்டும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தடைக்காலத்தில் அத்தியாவசியப் பொருள்களான உணவுப்பொருள்கள், மருந்துப்பொருள்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும் விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை. கொரோனா தொற்றைத் தடுக்க அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு