Published:Updated:

`மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை!’ - முதல்வர் பழனி சாமி அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16,000- த்திலிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாட்டின் 74-வது சுதந்திர தின விழா சிறப்பாகவும் எளிமையான முறையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகச் சென்னை கோட்டை கொத்தளத்தில் நான்காவது முறையாகத் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பின்னர் திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் அவருடன் பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர். கொரோனா பரவலால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, ``உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப் படி இந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கும் தியாகிகள், மாணவர்கள், குழந்தைகள் பிரபலங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை கொத்தளத்தில் நான்காவது முறையாக நம் நாட்டின் தேசிய கொடியை ஏற்றியதில் பெருமை கொள்கிறேன். தங்கள் சொந்த வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல் நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய அனைவரையும் இன்றைய நாளில் நினைவுகூர்வதில் பெருமை கொள்கிறேன்.

சமீபத்தில் நமது எல்லையில் அண்டை நாடு ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டபோது இந்தியர் என்ற உணர்வோடு படைக்குப் பின்னால் நின்று நம் முழு ஆதரவையும் தெரிவித்தோம். மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் உறுதியாக இருப்போம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு உலகத்தையே கொரோனா தொற்று புரட்டி போட்டுள்ளது. இதிலிருந்து மக்களைக் காக்க தமிழக அரசு கடுமையான திட்டங்களைத் தீட்டி போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சோதனை செய்யப்படுகிறது. விலகியிருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்ற என் கனிவான வேண்டுகோளை ஏற்று மக்கள் அதை முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.

சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா

நம் மாநிலத்திலிருந்து 4 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வந்தே பாரத் திட்டத்தின்படி பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் தமிழர்களைத் தாயகம் அழைத்து வந்துள்ளோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் முதியவர்கள், ஆதரவற்றோர், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோரின் பசியைப் போக்கும் வகையில் அம்மா உணவகம், சிறப்பு முகாம்கள், சமூக உணவகங்கள் மூலம் தினமும் 8 லட்சம் மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனாவுக்கு எதிராக முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கூட்டுறவு, சுகாதாரம், போலீஸார் போன்ற அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திரத்தில் ஒற்றுமையுடன் போராடி எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல் கொரோனாவுக்கு எதிரான போரிலும் இணைந்து வெற்றிபெறுவோம். கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.6,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16,000 -த்திலிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். வீரர்களின் வாரிசு தாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.8,000, ரூ.8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2.01 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. அம்மாவின் நினைவிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, விரைவில் அதைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளுடன் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடங்கு தங்கள் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கும் கொரோனாவை எதிர்த்து முன் வரிசையில் நின்று போராடியவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அடுத்த கட்டுரைக்கு