Published:Updated:

12 வருட ஏமாற்றம்; கர்நாடக நீர் பங்கீட்டில் சாதிப்பாரா துரைமுருகன்? - எதிர்பார்ப்பில் விவசாயிகள்

காவிரி ஆறு
காவிரி ஆறு ( நா.ராஜமுருகன் )

காவிரி நீர் பங்கீடு பிரச்னை பற்றிய விவரங்களை கரைத்துக் குடித்தவர். அதனால் துரைமுருகன், இந்த ஆண்டு முதல், நடுவர் மன்ற தீர்ப்பு படி, 10 நாள்களுக்கு ஒரு முறை காவிரி நீர் கணக்கிடப்பட்டு, தமிழகத்தின் பங்கை நிச்சயம் பெற்றுத் தருவார் என்று எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

``காவிரியில் நமக்குரிய நீர் பங்கீட்டைத் தராமல், கர்நாடக அரசு வஞ்சகம் செய்கிறது. இந்நிலையில், காவிரி பிரச்னையில் சகலத்தையும் அறிந்த துரைமுருகன் அந்தத்துறை அமைச்சராக இருப்பதால், தமிழக விவசாயிகளின் 12 வருடப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி ஆறு
காவிரி ஆறு
நா.ராஜமுருகன்

இதுகுறித்து, நம்மிடம் பேசிய காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் மாகாதானபுரம் ராஜாராம்,

``காவிரி பிரச்னையில் 1998-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம், தமிழக விவசாயிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அந்த சந்தேகங்களில் முக்கியமானது, `பற்றாக்குறை காலத்தில் பங்கீடு குறித்து தெளிவான குறிப்பு இல்லை' என்பது.

இதற்கு, அப்போது விளக்கமளித்த துரைமுருகன், `பற்றாக்குறை காலங்களில், இந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் உள்ளது' என்று சமாதானப்படுத்தினார். இந்தச் சமாதானத்தை ஏற்காத விவசாயிகள் மீண்டும் மீண்டும் இதே பிரச்னை குறித்த சந்தேகங்களை திரும்ப எழுப்பினர்.

ராஜாராம்
ராஜாராம்
நா.ராஜமுருகன்

தொடர்ந்து, அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், `இந்தத் தீர்ப்பை செயல்படுத்த காவிரி நிர்வாக வாரியம், நீர்ப்பங்கீடு ஒழுங்கு முறை குழு ஆகிய அமைப்புகளை அமைக்க நடுவர் மன்றம் வழி கண்டுள்ளது. வாரியத்தின் பணிகளைச் செயல்படுத்துவதற்காக, நீர்ப்பங்கீடு ஒழுங்கு முறை குழு அமைக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

10 நாள்களுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரைக் கணக்கிட்டு பகிர்ந்து அளிப்பது, இந்தக் குழுவின் தலையாய கடமை ஆகும். அதே நேரத்தில், இதனுடைய ஆணையை முழுமையாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி தமிழ்நாடு பன்மாநில நீர் தாவா சட்டத்தின் 5(3) விதியின் படி, நடுவர் மன்றத்தை அணுகி, தமிழக அரசு விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளது' என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், கடந்த 12 வருடங்களாகத் தீர்ப்பில் உள்ளபடி நீர்ப்பங்கீடு நமக்கு செய்யப்படவில்லை. இதனால், தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டோம்.

காவிரி ஆறு
காவிரி ஆறு
நா.ராஜமுருகன்
ஸ்டாலின் பதவியேற்ற 5-வது நிமிடம்... செந்தில் பாலாஜி சொன்னது நடக்கக் கூடாது- பதறும் இயற்கை ஆர்வலர்கள்

இந்நிலையில்தான், கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க அமோகமாக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. முன்பு மு.கருணாநிதியின் நிழலில் காவிரி நீர் தாவா முழுவதையும் நடத்திய துரைமுருகன்தான் இப்போது மூத்த அமைச்சர். அதனால்தான், முதல்வர் ஸ்டாலின் பொதுப்பணித்துறையைப் பிரித்து, நீர்வளத்துறை என்று ஒரு துறையை ஏற்படுத்தி, துரைமுருகனை அதற்கு அமைச்சராக நியமித்துள்ளார். காவிரி நடுவர் மன்ற ஆணைப்படி, கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடக அரசு, ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறையைக் காட்டி தமிழகத்துக்கு நீர் பங்கீடு செய்வதில் காலதாமதப்படுத்துவதிலும், சரியான கணக்கீடு படி தண்ணீர் விடுவதைத் தவிர்ப்பதிலும் உறுதியாகப் பற்றி நின்றது.

நடுவர் மன்றம் தனது தீர்ப்பில், 50 சதவிகித நம்பகத்தன்மை அடிப்படையில் மொத்த நீரைக் கணக்கிட்டு இருந்தாலும், நீர்ப்பற்றாக்குறை காலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விகிதாசாரத்தின் அடிப்படையில் பகிர்ந்து, தண்ணீரைக் காவிரி நீர் பங்கீடு ஒழுங்கு முறை குழு 10 நாள்களுக்கு ஒரு முறை வரும் நீரை கணக்கிட்டு பகிர்ந்து அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, நம்பகத்தன்மை 50 சதவிகிதம் இருந்தாலும், பற்றாக்குறை அவ்வப்போது கணக்கீடு செய்வதால், நமக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை' என்று 1998-ல் சமாதானம் செய்த துரைமுருகன்தான் தற்போது நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். அதனால், கடந்த 12 ஆண்டுகளாகப் பற்றாக்குறை விதியை மதிக்காத கர்நாடக அரசை, துரைமுருகன் தட்டிக் கேட்க வேண்டும். சீனியர் அமைச்சரான துரைமுருகன், காவிரி நீர் பங்கீடு பிரச்னை பற்றிய விவரங்களைக் கரைத்துக் குடித்தவர்.

காவிரி ஆறு
காவிரி ஆறு
நா.ராஜமுருகன்

அதனால் துரைமுருகன், இந்த ஆண்டு முதல் நடுவர் மன்ற தீர்ப்பு படி, 10 நாள்களுக்கு ஒரு முறை காவிரி நீர் கணக்கிடப்பட்டு, தமிழகத்தின் பங்கை நிச்சயம் பெற்று தருவார் என்று எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால், கர்நாடக அரசால் விவசாயிகள் வஞ்சிக்கப்படும் 12 ஆண்டுகால நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு துரிதமாக அவர் செயல்பட்டு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய தண்ணீரை அவர் காவிரியில் பெற்று, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு