கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. மேல்சிகிச்சை அளிக்கவும், அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வீரவேல் ( வயது35 ). இவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர், 21-ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த செல்வம் என்பவரின் விசைப்படகில் 10 பேருடன், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீரவேல் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரின் சிகிச்சைக்காக தமிழக அரசு கொடுத்த ரூ.2 லட்சத்தைப் பெற்று, முழுமையாக மருத்துவச் செலவு செய்திருக்கிறார். தற்போது வீடு திரும்பியிருக்கும் வீரவேல் படுகாயமடைந்த நிலையில் இருப்பதன் காரணமாக, உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது பற்றி வீரவேல் மனைவி மதுமதியிடம் பேசினோம். "திரவ ஆகாரங்களை மட்டுமே உட்கொண்டுவருகிறார். குண்டு வயிறு, தொடையில் பாய்ந்ததால் இனி அவரால் வேலைக்குச் செல்ல முடியாது. படுக்கையில் கணவரைவைத்துப் பராமரித்து, இரண்டு குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது... அரசு அறிவித்த எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை.

கணவரின் மேல் சிகிச்சைக்கு அரசு உதவிசெய்ய வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு அரசு வேலை தர வேண்டும். எங்கள் கஷ்டத்தை சீர்காழி ஊராட்சி ஒன்றிய தி.மு.க சேர்மேன் கமலஜோதி தேவேந்திரனிடம் சொன்னேன். அவர் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் வாயிலாக முதல்வருக்கு எங்கள் நிலையைத் தெரிவித்து உரிய உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்" என்றார்.