Published:Updated:

யார் இந்தப் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்? - டி.என்.பி.எஸ்.சி சேர்மனாகத் தேர்வான பின்னணி

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

டி.என்.பி.எஸ்.சி சேர்மனாக பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கலெக்டராகப் பணியைத் தொடங்கிய பாலசந்திரன், தன்னுடைய கடின உழைப்பால் டி.என்.பி.எஸ்.சி சேர்மனாகியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி சேர்மனாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அருள்மொழி கடந்த 2015-ம் ஆண்டு முதல் 25.3.2020 வரை இருந்தார். இவரின் பணிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய சேர்மனாக பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. சேர்மனாக நியமிக்கப்பட்ட பாலசந்திரனுக்கு பல சவால்கள் காத்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவித்தன.

`தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா!' -பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக அதிகரிப்பு #NowAtVikatan
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

இகுறித்து நம்மிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் சிலர், ``டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதில் டி.என்.பி.எஸ்.சி ஊழியர், அரசு ஊழியர், காவலர், புரோக்கர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சமயத்தில்தான் டி.என்.பி.எஸ்.சி-க்கு புதிய சேர்மனாக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி சேர்மனாக பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு வணிகவரி, பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர். இவர், தஞ்சாவூரில் பிறந்தவர். இவரின் தந்தை காசி, வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1986-ல் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற பாலசந்திரன், பழனியில் துணை கலெக்டராக பணியைத் தொடங்கினார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு
`நான் புரோக்கர்தான்; எனக்கு மேல் சிலர் உள்ளனர்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய சித்தாண்டி

1994-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தர்மபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் 7 ஆண்டுகளாக கலெக்டராக பணியாற்றினார். 2000-ம் ஆண்டு தர்மபுரியில் கலெக்டராக பாலசந்திரன், பணியாற்றியபோது சிறுசேமிப்பு துறையில் சாதனை படைத்தற்காக விருது வழங்கப்பட்டது.

2003-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் கலெக்டராக இருந்த சமயத்தில் மாற்றுத்திறனாளிகள் துறையில் சாதனை படைத்ததற்காக விருது பெற்றார். சமூகநலத்துறை, வேளாண் துறை, உள்ளாட்சித்துறை, உணவு மற்றும் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை, தொழில்துறை, காதி போர்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் தலைவராகப் பணியாற்றினார்.

பாலசந்திரன் ஐஏஎஸ்
பாலசந்திரன் ஐஏஎஸ்

கடந்த 2 ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார். 2018-ம் ஆண்டு பதிவுத்துறையில் நல்ஆளுமை விருதைப் பெற்றார். 2019-ம் ஆண்டும் நல் ஆளுமை விருது சுதந்திர தின விழாவின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

டி.என்.பி.எஸ்.சி சேர்மனாக இவருக்குப் பதவி கிடைத்ததற்கு இவரின் கடின உழைப்பும் சிறந்த நிர்வாகத்திறமையும் காரணமாக இருந்தாலும் பாலசந்திரனின் குடும்பப் பின்னணியும் மற்றொரு காரணம். சிதம்பரத்தில் கோலோச்சிய ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவரின் மருமகன் இவர். மேலும், டெல்டா மாவட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் உறவினர். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட அந்தத் தலைவரின் சிபாரிசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய மூத்த அமைச்சர் ஒருவரால்தான் பாலசந்திரனுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் பணியாற்ற போட்டா போட்டி நடப்பதுண்டு. இந்தத்துறையில் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய பாலசந்திரன், துறையின் முன்னேற்றத்துக்காக சிறப்பாகச் செயல்பட்டார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால்தான், பாலசந்திரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பதவியை வழங்கியதாகக் கூறுகின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். தேர்வு முறைகேடுகளால் டி.என்.பி.எஸ்.சி குற்றச்சாட்டுக்களில் சிக்கிய சூழலில், புதிய சேர்மனாக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு