Published:Updated:

`4 நாள்கள் முழு ஊரடங்கு; பொதுப்போக்குவரத்து நிறுத்தம்!’- அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்

தமிழக அரசு - ஊரடங்கு உத்தரவு
தமிழக அரசு - ஊரடங்கு உத்தரவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 31 வரை ஊரடங்கு!

ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் பேசிய மருத்துவ நிபுணர்கள், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து பரிந்துரைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு எப்படி இருக்கலாம்? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

* கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக 30-06-2020 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு 31-07-2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

* சென்னைக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 19-06-2020 முதல் அமலில் உள்ள முழு ஊரடங்கு மற்றும் மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24-06-2020 முதல் அமலில் உள்ள முழு ஊரடங்கு, மேற்கண்ட பகுதிகளில் 5.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தொடரும். இப்பகுதிகளில் ஜூலை 6ம் தேதி முதல் முந்தைய நிலையே தொடரும்.

* ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடமிருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனைக் கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

தடை விதிக்கப்பட்டவை

* நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களிலும் பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.

* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

* நீலகிரி மாவட்டத்துக்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை.

* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும் மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு விலக்கு.

* வணிக வளாகங்கள் (Shopping Malls)

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு
தே.அசோக்குமார்

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணையவழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை தொடரும்.

* மெட்ரோ ரயில்/மின்சார ரயில்.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக் கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குத் தடை.

* மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

முழு ஊரடங்கு மட்டுமே முழுமையான தீர்வல்ல!

முழு ஊரடங்கு

5.7.2020, 12.7.2020,19.7.2020, 26.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதத் தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்கள்

* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

பொதுப் பேருந்துப் போக்குவரத்து

மாநிலத்தில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசுப் பொதுப் பேருந்துப் போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இ-பாஸ் முறை

* அந்தந்த மாவட்டத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும்

* வெளிமாநிலங்களுக்குச் சென்று வரவும் வெளிமாவட்டங்களுக்குச் சென்றுவரவும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருக்கும்.

* முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 30ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ள இ-பாஸ், ஜூலை 5ம் தேதி வரை செல்லுபடியாகும். இதற்குப் புதிதாக இ-பாஸ் வாங்க வேண்டியதில்லை.

 ஊரடங்கு
ஊரடங்கு

சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 6.7.2020 முதல்..

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் அந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவிகிதப் பணியாளர்கள், அதிகபட்சம் 80 பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* அனைத்துத் தனியார் நிறுவனங்களும் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய ஜவுளிக் கடைகள் போன்றவை 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி. உரிய சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் அமர்ந்து பயணிக்கலாம்.

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி.

* மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்ற இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனை நிலையங்கள் சமூக இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி.

அடுத்த கட்டுரைக்கு