Published:Updated:

`பொது போக்குவரத்து, கடைகள், நிறுவனங்களுக்கு அனுமதி!’ - தமிழக அரசு அறிவிப்பு

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு, பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பி வெளியிட்டுள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்றுடன் நான்காம்கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக UNLOCK 1.0 என்ற பெயரில் நேற்று மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகள் தொடர்பாகத் தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

அதில் நாளை முதல் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``மாநிலத்தில் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதால் மாநிலம் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்.

மண்டலம் 2 : தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி.

மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி.

மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை.

மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்.

மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.

மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

 சென்னை
சென்னை

மண்டலம் 7 மற்றும் 8 ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் 50% பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். மண்டலம் 7 & 8-ல் பொது போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது. குறிப்பிட்ட தடங்களில் மட்டும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளில் மட்டுமே சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர்ந்து இயக்க அனுமதிக்கப்படுகிறது.

மண்டலங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை, அதேபோல் பொது போக்குவரத்தில் பயணிக்கவும் பாஸ் தேவையில்லை. மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் இருக்கும் போக்குவரத்து தடை தொடர்கிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் தடை!

`வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் போன்ற அனைத்துக் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள் (Bar), சுற்றுலாத் தலங்கள், கடற்கரை, பூங்காக்கள், விளையாட்டு, பொதுக்கூட்டம், விழாக்கள், ஊர்வலங்கள் போன்ற அனைத்துக்கும் தடை தொடரும்.

இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கும் மேல் பங்கேற்கக் கூடாது, திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும் மேல் பங்கேற்கக் கூடாது. நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வெளியூர் பயணிகள் செல்ல தடை.

 கடைகள்
கடைகள்

புதிய தளர்வுகள்!

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் அந்நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 - 40 பேர் வரை பயணம் செய்யலாம். அனைத்து நிறுவனங்களும் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி, இயன்றவரை வீட்டிலிருந்து பணி செய்ய ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், ஜவுளி கடைகள், பெரிய கடைகள், நகைக் கடைகள் போன்றவை 50% பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், AC இயக்கப்படக் கூடாது. மத்திய அரசு அறிவிப்புப் படி ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி. ஆனால், சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

`கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுருங்கிய லாக் டெளன்’ - மத்திய அரசின் `UNLOCK 1.0’ ஹைலைட்ஸ்

டீக்கடைகள், உணவு விடுதிகள், காய்கறி, மளிகை போன்ற கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர்களைத் தவிர்த்து 3 பயணிகளுடன் பயணிக்க அனுமதி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முழுமையான அறிவிப்பு - https://drive.google.com/file/d/1pIelDovXKq5Wgzx4mFSiF9QW3fzFuXbX/view

அடுத்த கட்டுரைக்கு