Published:Updated:

`இரண்டு மாத தாமதம்!' - திருவள்ளுவர் தின விழாவில் வழங்கப்பட்ட கலைச்செம்மல் விருதுகள்!

திருவள்ளுவர் விருது
திருவள்ளுவர் விருது

முதல்வருக்கும் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் இடையிலான பனிப்போரே அதற்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ஜூனியர் விகடனில் அது பற்றிக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

கடந்த நவம்பர் 1 தமிழ்நாடு நாள் விழாவில் கொடுக்கப்படவிருந்த கலைச்செம்மல் விருதுகள் கடைசி நேரத்தில் கொடுக்கப்படவில்லை. முதல்வருக்கும் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் இடையிலான பனிப்போரே அதற்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ஜூனியர் விகடனில் அது பற்றிக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஒருவழியாக இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலைச்செம்மல் விருதுகள் வழங்கப்பட்டுவிட்டன.

காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று நடத்தினார். இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழ்க் கலாசாரத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 23 அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருவள்ளுவர் விருது
திருவள்ளுவர் விருது

தமிழ் மொழி சார்ந்து செயல்படும் இலக்கியவாதிகள், புலவர்கள், தமிழ் மொழியியல் அறிஞர்கள் மற்றும் முனைவர்கள் முதலியோரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசால் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், உலகப் பொதுமறை எனப் பார் போற்றும் திருக்குறளை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரை மேன்மைப்படுத்தும் நோக்கிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிஞர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார்.

2019-ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை செஞ்சி ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். அவருக்கு விருதுடன் ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கமும் வழங்கப்பட்டன. 2019-ம் ஆண்டின் திருவள்ளுவர் விருது நிதாயானந்த பாரதிக்கும், பேரறிஞர் அண்ணா விருது கோ.சமரசத்துக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது முனைவர் க.அர்ச்சுணனுக்கும் வழங்கப்பட்டன. அதேபோல், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை தேனிசை செல்லப்பா, கபிலன் விருதினை வெற்றியழகன், உ.வே.சா விருதினை வே.மகாதேவன், இளங்கோவடிகள் விருதினை கவிக்கோ ஞானச்செல்வன், முதலியோர் பெற்றுக்கொண்டனர்.

திருவள்ளுவர் விருது
திருவள்ளுவர் விருது

மேலும், 2019 -ம் ஆண்டுக்கான தமிழ்த் தாய் விருது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்திக்கொடுத்த சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு இம்முறை வழங்கப்பட்டது. தொடர்ந்து, இலக்கிய விருது மலேசியா வாழ் தமிழருக்கும், இலக்கண விருது பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் கஸ்தூரி பாய்க்கும் வழங்கப்பட்டன. 2019-ம் ஆண்டிற்கான மொழியியல் விருதினை முதல்வரிடமிருந்து இலங்கையைச் சேர்ந்த சுபதினி ரமேஷ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலைச் செம்மல் விருதுகள், மரபு வழிக் கலை வல்லுநர்கள் விருதுகள் அளிக்கப்பட்டன. நாட்டுடமையாக்கப்பட்ட ஏழு நூல்களின் ஆசிரியர் குடும்பங்களுக்கும் இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

உங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்... இதையெல்லாம் பாலோ பண்ணுங்க...

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மொழி சார் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்புரையாற்றிய தமிழகத் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், கீழடி ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழின் பெருமையை உலகறியச் செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளதென்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவிலேயே அதிகளவில் புத்தகப் பதிப்புகள் வெளியாகி இருப்பது தமிழில்தான் என்று கூறினார். தமிழ் மொழி உலகின் ஆகச்சிறந்த மொழி என்பதனை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் கீழடியின் பெருமைகளை சென்னை மக்களும் கண்டறிய வேண்டுமென்று புத்தகக் கண்காட்சியில் கீழடி மாதிரி அமைத்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

திருவள்ளுவர் விருது
திருவள்ளுவர் விருது

விருது பெற்றவர்கள் கூறுகையில், ``இந்தியாவிலேயே அதிகளவில் மொழி சார் விருதுகள் தமிழ்நாட்டில் வழங்கப்படுவது, தமிழ் மக்களும் அரசும் தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்றினைப் பிரதிபலிக்கிறது. இது எங்களைப் போன்ற மொழியியல் செயற்பாட்டாளர்களை இன்னும் சிறப்பாய்ச் செயல்பட ஊக்குவிக்கும்'' என்று தெரிவித்தனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரபு கலந்துகொண்டார்.

பின் செல்ல