Published:Updated:

உடுமலை சங்கர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!’ - தீண்டாமை ஒழிப்பு முன்னணி

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

`உடுமலை சங்கர் ஆணவக்கொலை மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியக் குற்றவாளி சின்னச்சாமியை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது கவலையளிக்கிறது’

உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்தும், மற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. `இத்தீர்ப்பு சாதிவெறி நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்திடும், எனவே, தமிழக அரசு உடனே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்' என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது’ என்று வலியுறுத்தியுள்ளது.

சங்கர்-கவுசல்யா
சங்கர்-கவுசல்யா

அந்த அமைப்பின் மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் ஆகியோர் இதுபற்றி நம்மிடம் பேசும்போது,``சாதிவெறி கொடூரத்திற்கு உச்சம் உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே இந்த ஆணவக்கொலை அதிர வைத்தது. முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற வழக்குகளின் தீர்ப்புதான் எதிர்காலத்தில் நடைபெறும் குற்றங்களை அதிகரிக்கவோ, கட்டுப்படுத்தவோ செய்யும். அந்தளவிற்கு அனைவராலும் கவனிக்கப்பட்ட வழக்கு இது.

கவுசல்யா-சங்கரின் சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் 2016 மார்ச் 13-ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொடுங்காயங்கள் அடைந்த கௌசல்யா உயிருக்குப் போராடித்தான் பிழைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் ஆதரவுடன் கவுசல்யா நீதிக்காகப் போராடினார். அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வழக்கறிஞர் சங்கரநாராயணன் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கவுசல்யாவின் தகப்பனார் சின்னச்சாமி உட்படக் கூலிப்படையினர் ஜெகதீஷ், மணிகண்டன்,செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 2017 டிசம்பர் 6 -ல் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது.

இந்தநிலையில், மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியக் குற்றவாளி சின்னச்சாமியை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது கவலையளிக்கிறது. எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவர் குற்றவாளி இல்லை என்றால், சங்கர் ஏன் கொல்லப்பட்டார் என்பதை நீதிமன்றம் விளக்கிட வேண்டும். தற்பொழுது தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள கொலையாளிகளுக்கும், சங்கருக்கும் உள்ள தொடர்புக்கு யார் காரணம்?

சாமுவேல்ராஜ்
சாமுவேல்ராஜ்

சாதாரண மனிதர்களுக்குத் தெரியும். இந்த விஷயம், நிரூபிக்கப்படாமல் போனதற்குத் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். எனவே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மேல்முறையீட்டை வலியுறுத்தி மனு அளிக்கவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு