Published:Updated:

`பொதுமக்கள் நலனுக்கே ஆபத்து!- அரசின் நடவடிக்கையால் சிக்கலில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது உரிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்காக மூன்றாவது முறையாகத் தேசிய அளவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லாக்டௌன் 3.0-வில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக இதுவரை எந்த நாடும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல், உலக சுகாதார நிறுவனமும் தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருவதாகக் குறிப்பிட்டு வருகிறது.

Be (கொரோனா) Negative!
Be (கொரோனா) Negative!

இந்தநிலையில், கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகச் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் தொடர்ந்து கூறிவந்தார். சென்னை ஜெய் நகர் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் `ரத்னா சித்த மருத்துவமனை’ என்ற பெயரில் அவர் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

கோயம்பேட்டிலிருந்து போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பரவிய கொரோனா? - கலக்கத்தில் காவல்துறை #Corona

இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே மருத்துவமனைக்கு மாற்றுங்கள். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை தரட்டும். நோயாளிகள் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தோடு சேர்த்து, நான் கொடுக்கும் மருந்தையும் எடுத்துக்கொள்ளட்டும். இதனால் எந்தப் பின்விளைவும் வராது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் இந்த நோயால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பண்பு இரண்டு அல்லது மூன்று நாள்களில் மாறிவிடும். 10 நாள்களில் இந்தியாவில் உள்ள அனைத்துக் கொரோனா நோயாளிகளையும் நான் குணமாக்கிவிடுவேன்.

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறப்பு வார்டுக்குள் என்னை அனுமதியுங்கள். அதனால் என் உயிருக்கு வரும் ஆபத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரே நேரத்தில் அங்குள்ள அனைத்து நோயாளிகளையும் தர முடியாது என்றாலும்கூட எனக்கு 5 நோயாளிகளைத் தாருங்கள். 48 மணி நேரம் காலஅவகாசம் கொடுங்கள். அந்த மருந்துகளை நான் சாப்பிட்ட பின்பே அந்த நோயாளிகளுக்குக் கொடுக்கிறேன். மத்திய அமைச்சர் முன்பு அந்த மருந்தை நான் சாப்பிட்டுக் காட்டினேன். மத்திய அமைச்சரும் அதைச் சாப்பிட்டுப் பார்த்தார். என்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளை 48 மணிநேரம் கழித்து பரிசோதித்துப் பாருங்கள். அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் அனைத்து நோயாளிகளையும் என்னிடம் தாருங்கள்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப், முகநூல் போன்ற எலக்ட்ரானிக் மீடியாவில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் the epidemic deseases act and regulations பிரிவு 8-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை
அறிக்கை

மேற்கண்ட வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் க.திருத்தணிக்காசலம் என்பவர் கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூகவலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியைப் பரவவிட்டு, பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால் அவர், மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சட்டரீதியாகத் தக்க நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை அவர்களால் சென்னை காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோய்க் காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என அனைவரும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு