Published:Updated:

சிறுமிகளின் உருக்கமான மனு; குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நிதி ஒதுக்கிய அரசு... குவியும் பாராட்டு!

கயல்விழி, கார்குழலி
கயல்விழி, கார்குழலி

``சின்னப்புள்ளைங்க எழுதின மனுதானேனு அலட்சியப்படுத்தாம இவ்வளவு சிக்கீரம் நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அதிகாரிகளுக்கும் ஊர்மக்கள் சார்பா நன்றி சொல்லிக்கிறேன்’’ என உணர்ச்சிவசப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே அமைந்துள்ளது வாட்டார் கிராமம். இங்கு சுமார் 1,200 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் இவர்கள் குடிப்பதற்கு தூய்மையான குடிநீர் கிடைக்காததால், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான் இப்பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகள் எழுதிய உருக்கமான மனுவால், இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழக அரசு 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் ஊர்மக்கள் நெகிழ்ச்சி அடைந்து, அந்தச் சிறுமிகளை நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

ஒருகாலத்தில் வாட்டார் ஊராட்சி செழிப்பான விவசாய பூமியாக இருந்திருக்கிறது. குறிப்பாக, நிலத்தடி நீர் வளமாக இருந்ததால் இங்கு மூன்று போகமும் விவசாயம் நடந்திருக்கிறது. 8 அடி ஆழத்திலேயே, சுத்தமான குடிநீரும் அபரிமிதமாகக் கிடைத்திருக்கிறது. ஆனால், இங்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைத்துச் செயல்படத் தொடங்கியதும் நிலத்தடி நீர், ரசாயனத்தன்மையுடையதாக மாறியிருக்கிறது. குறிப்பாக, குடிநீரில் உப்புத்தன்மை அதிகரித்ததால், இப்பகுதி மக்கள் பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

வாட்டார் ஊராட்சி
வாட்டார் ஊராட்சி

இந்நிலையில்தான் இப்பகுதியில் வசிக்கும் அன்பழகன் என்பவரின் மகள்கள் கடந்த பிப்ரவரி மாதம் எழுதிய உருக்கமான மனுவால், இப்பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. மூத்த மகள் கயல்விழி எட்டாம் வகுப்பும், இளைய மகள் கார்குழலி ஆறாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதை இந்த இரு சிறுமிகளும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறார்கள். தங்கள் ஊரின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு, உருக்கமாக மனு எழுதி தங்கள் தந்தை மூலம் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்களுக்கு 100 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என அறிவித்தார்.

கயல்விழி மற்றும் கார்குழலி இருவரும் சேர்ந்து எழுதிய மனுவுக்கு மதிப்பளித்தும், இதன் உடனடி அவசியத்தை உணர்ந்தும் இப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தற்போது தமிழக அரசு, 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் நெகிழ்ச்சி அடைந்த வாட்டார் ஊராட்சி மக்கள், சகோதரிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மாணவி கயல்விழியிடம் நாம் பேசியபோது, ``இந்தப் பகுதி மக்கள், குடிக்குறதுக்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு இருக்கோம். இங்க கிடைக்கக்கூடிய நிலத்தடி நீர், பயங்கர உப்புத்தன்மையோட, பிசுபிசுனு மஞ்சள் கலர்ல இருக்கும். இந்தத் தண்ணீர்லதான் சோறு சமைச்சாகணும். அதுவும் மஞ்சள் கலர்ல இருக்கும். வாடையும் அடிக்கும். இந்தத் தண்ணீரை பயன்படுத்துறதுனால, எங்க ஊர்ல கடந்த ரெண்டு வருசத்துல மட்டுமே 16 பேர் கிட்னி பிரச்னையால் இறந்து போயிருக்காங்க. இதனால இந்தப் பகுதி மக்கள் ரொம்பவே சிரமப்பட்டுக்கிட்டு இருக்கோம். எங்களோட கஷ்டத்தை எல்லாம் எழுதி, எங்க ஊர் குடி தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைங்கனு, நானும் என் தங்கச்சி கார்குழலியும் சேர்ந்து ஸ்டாலின் சாருக்கு மனு எழுதினோம்.

`கொரோனா பிரச்னையால் எங்களால உங்களை நேர்ல சந்திச்சு மனு கொடுக்க முடியலை. அதனால் எங்க அப்பாகிட்ட இந்த மனுவை கொடுத்து அனுப்புறோம்'னு அதுல எழுதியிருந்தோம். வேளாங்கண்ணி பக்கத்துல உள்ள பிரமநாதபுரத்துக்கு ஸ்டாலின் மனு வாங்க வந்திருந்தார். அங்கயிருந்த மனு கொடுக்கும் பெட்டியில, எங்கப்பா, மனுவை போட்டுட்டு வந்தாங்க. இப்ப எங்க ஊர்ல குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கியிருக்காங்க. எங்க ஊர்மக்கள் ரொம்பவே சந்தோஷத்துல இருக்காங்க. ரொம்ப பெருந்தன்மையோடு எங்களைத் தேடி வந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க'’ என்றார்.

கயல்விழி, கார்குழலி
கயல்விழி, கார்குழலி

ஒட்டுமொத்த கிராமத்தினரும் தங்கள் ஊரின் மகள்களை உச்சி முகர்ந்து பாராட்டுவதால், மிகுந்த நெகிழ்ச்சியில் உறைந்திருக்கிறார், இந்தச் சகோதரிகளின் தந்தை அன்பழகன். ``இப்படி ஒரு மனு எழுதப்போறோம்ங்கற விஷயத்தைகூட என் பொண்ணுங்க என்கிட்ட சொல்லல. மனுவை எழுதி என் கையில் கொடுத்த பிறகுதான் இதுல என்னை எழுதியிருக்கோம்ங்கற விஷயத்தையே என்கிட்ட சொல்லி, இதை ஸ்டாலின் சார்கிட்ட கொடுத்துடுங்கனு சொன்னாங்க. நானும் கொண்டு போயி, பெட்டியில் போட்டேன். சின்ன புள்ளைங்க எழுதின மனுதானேனு அலட்சியப்படுத்தாம இவ்வளவு சிக்கீரம் நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அதிகாரிகளுக்கும் ஊர்மக்கள் சார்பா நன்றி சொல்லிக்கிறேன்’’ என உணர்ச்சிவசப்பட்டார்.

இரண்டு சிறுமிகளையும் மனமார பாராட்டும் ஊர்மக்கள், ``இந்தச் சின்ன வயசுல, ஊரோட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மனு எழுதணும்ங்கற எண்ணம் வந்ததே மிகப்பெரிய விஷயம். எங்களோட வாட்டார் ஊராட்சியில மட்டுமே 12 பெட்ரோல் கிணறுகள் இருக்கு. இதனால நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்குப் போயி, ரசாயனத்தன்மை கலந்துடுச்சு. இந்தத் தண்ணீரை குடிக்குறதுனால, ஏகப்பட்ட பாதிப்புகளை அனுபவிச்சிக்கிட்டு இருக்கோம். ஓரளவுக்கு உப்புத்தன்மை குறைவா உள்ள தண்ணீர் வேணும்னா, ரொம்ப தூரம் நடந்துபோயி, அதுவும் ஒரு வீட்ல இருந்துதான் தூக்கிக்கிட்டு வரணும். அதுலயும் ஏகப்பட்ட பிரச்னை. வாட்டார் மக்கள் பெரும்பாலும் உப்புத்தண்ணீரைதான் குடிச்சிக்கிட்டு இருக்கோம். கயல்விழியும் கார்குழலியும் மனு எழுதியதால இப்ப எங்க ஊர்மக்களுக்கு விமோசனம் கிடைக்கப்போகுது’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு