Published:Updated:

தமிழ்நாடு ஊரடங்கு: `டாஸ்மாக் முதல் போக்குவரத்து வரை!' - கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான கூடுதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, பேருந்து போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்குவது, வழிபாட்டுத் தலங்களை திறப்பது, நோய் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் தேநீர் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிப்பது, உள்ளிட்ட முக்கிய தளர்வுகள் குறித்து இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சுகாதாரத்துறை அதிகாரிகள், நிதித்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு தணிந்துள்ளதன் காரணமாக அமலிலுள்ள ஊரடங்கை மேலும் பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது தமிழகத்தில் ஊரடங்கு 5-07-2021 முதல் 12-07-2021 மாலை 6 மணி வரை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பில் என்னென்ன கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்:-

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள்!

  • பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதி!

    அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதி. உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். அரங்குகளில் பொருட்காட்சி அமைப்பாளர்கள் மற்றும் விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் RTPCR பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

  • உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி!


    உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களிலுள்ள உணவகங்களில் காலை 6:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை உரிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி. அதேபோல், தேநீர்க் கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

  • கேளிக்கை விடுதிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி!


    அனைத்து மாவட்டங்களிலும் கேளிக்கை விடுதிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

  • வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி!


    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.

  • வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி!


    வணிக வளாகங்கள் (Shopping complex / Malls) காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வளாகங்களிலுள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்கள் இயங்க அனுமதியில்லை.

பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
  • பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி!

    மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டும் குளிர்சாதன வசதிகள் இல்லாமல் பயணிகள் பயணிக்கலாம்.

  • இ-பாஸ் நடைமுறை ரத்து!

    மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பு குறித்த முழு விவரங்களுக்கு:

download
அடுத்த கட்டுரைக்கு