தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன்முதலில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த நினைவு இல்லம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, வேதா இல்லம் அமைந்துள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கியது. தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேதா இல்லத்துக்கு உரிமை கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சாதகமாக வரவே, போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டது தமிழக அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கிடையில், இது தொடர்பாக வருவாய்த் துறை சார்பில் சமீபத்தில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், `வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை. அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த இல்லம் அமைந்துள்ள நிலத்துக்கு அடியில் எந்தவிதமான கனிம வளங்களும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக தற்போது அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இந்தச் சட்டத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஒப்புதல் அளித்துள்ளார். வேதா இல்ல நினைவிட அறக்கட்டளைக்குத் தமிழக முதல்வர் தலைவராக இருப்பார் என்றும் துணை முதல்வர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதா இல்லம் மற்றும் அங்குள்ள பொருள்களைப் பராமரிக்கவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இந்த அறக்கட்டளையே மேற்கொள்ளும் என அவசரச் சட்டம் தொடர்பான அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.