Published:Updated:

`35 சிறுவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்’ - சென்னை அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய வைரஸ் தொற்று!

கொரோனா பாசிட்டிவ்
கொரோனா பாசிட்டிவ்

ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 35 சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்கு கட்ட ஊரடங்கு முடிந்த பிறகும் மொத்த இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா  சோதனை
கொரோனா சோதனை

அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மற்ற மாவட்டங்களைவிட கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது. நேற்று மட்டும் சென்னையில் சுமார் 1,146 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது. வட சென்னையான ராயபுரம் மண்டலத்தில்தான் மிக அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்நிலையில், அதே ராயபுரத்தில் இருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த 35 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வட சென்னை மற்றும் புறநகர் பகுதியிலிருந்த சுமார் 55 சிறுவர்கள் தற்காலிகமாக அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நடந்த சோதனையில் நேற்று 23 சிறுவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 12 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

கொரோனா
கொரோனா

வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக் காப்பகத்திலிருந்த மற்ற சிறுவர்கள் அனைவரும் அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அரசு காப்பகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு