Published:Updated:

புத்தாண்டும் புதுப்புது அறிவிப்புகளும்; ஸ்ஸ்ஸ்... உண்மையிலேயே முடியலடா கொரோனா சாமீ!

மெரினா கடற்கரை
News
மெரினா கடற்கரை

`31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும். மெரினா, எலியட்ஸ், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம்' என்றெல்லாம் திடீரென சுரத்துக் குறைந்ததுபோல ஓர் அறிவிப்பை வெளியிட்டது காவல்துறை.

புத்தாண்டு பற்றிய பேச்சுகள் கிளம்பும் முன்பாகவே, கொரோனாவின் புதிய வரவான ஒமிக்ரான் கிளப்பிவிட்ட பீதியில், மக்கள் யாரும் பயப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும்தான் அதிக பதற்றத்துக்கு ஆளானது போலத் தெரிகிறது. அதுகூட உண்மையான பதற்றமா... அல்லது இந்த ஒமிக்ரானை வைத்தும் ஏதாவது `கும்மி'யடிக்கலாம் என்பதற்கான திட்டமா என்று தெரியவில்லை. ஆனால், மக்களை ஏகத்துக்கும் குழப்புகிறார்கள் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.

எந்த விஷயத்திலும் தெளிவானதொரு முடிவை எடுக்காமல், தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்போல, போலீஸ் ஒருபக்கம், சுகாதாரத்துறை ஒருபக்கம் எனத் திரிய, இடையில் புகுந்து அறநிலையத்துறை வேறு கரடி விட்டுக் கொண்டிருக்கிறது. ஆகமொத்தம், `கொரோனா சாமீ... எங்களால முடியல சாமீ' என்று சொல்வதைத் தவிர வேறுவழியில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை?' முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி இரண்டு நாள்களும் தமிழகத்தின் அனைத்துக் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதியில்லை.

`புத்தாண்டு கொண்டாட்டம் கண்காணிக்கப்படும்' - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இப்படியெல்லாம் மிரட்டலான அறிவிப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருந்த சூழலில், திடீரென்று...

`31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும். மெரினா, எலியட்ஸ், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம்' என்றெல்லாம் திடீரென சுரத்துக் குறைந்ததுபோல ஓர் அறிவிப்பை வெளியிட்டது காவல்துறை.

கட்டுப்பாடோ... வேண்டுகோளோ ஏதோ ஒன்றாக இருந்து தொலைத்துவிட்டுப் போகட்டும் என்று பார்த்தால், உச்சக்கட்ட குழப்பமாக... இன்று (டிசம்பர் 30-ம் தேதி) காவல் துறை மற்றும் அறநிலையத்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

`சென்னையில் 31-ம் தேதி இரவு 12 மணி முதல் ஜனவரி 1 காலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்குத் தடை' என்பது சென்னை பெருநகர காவல்துறையின் அறிவிப்பு.

இப்படி ஓர் அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, `புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் தரிசனத்துக்குத் தடையில்லை' என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமிருந்து அதிரடி அறிவிப்பு.

சேகர்பாபு
சேகர்பாபு

இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது?

நள்ளிரவு 12 மணி முதல் 1-ம் தேதி காலை வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கும்போது, நள்ளிரவு தரிசனத்துக்காகக் கோயில்களுக்கு மக்கள் எப்படி செல்வார்கள். ஒருவேளை பாதயாத்திரையாக வரலாம் என்று உள்ளுக்குள் நினைத்திருந்தால், அதை அறிவிப்பாகவே வெளியிட்டிருந்தால்கூட பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்துக்கு சென்னை வளசரவாக்கத்திலிருந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். மாலை 5 மணிக்கே நடக்க ஆரம்பித்தால், எப்படியும் நள்ளிரவு 12 மணிக்கு பார்த்தசாரதியை தரிசித்துவிடலாம்.

ஆனால், நடப்பதற்கு அனுமதி உண்டா என்பதும்கூட தெளிவுபடுத்தப்படவில்லை.

படுத்தி எடுக்கறாங்களே பார்த்தசாரதி!

- பூநீ