Published:Updated:

`117 பேர் அட்மிட்; மீதமுள்ளவர்கள் எங்கே?' - டெல்லியிலிருந்து திரும்பியவர்களைத் தேடும் சுகாதாரத்துறை

நிஜாமுதீன் ஜமாத்
நிஜாமுதீன் ஜமாத்

கரூர் மாவட்டத்தில் 33 பேர் டெல்லி சென்று திரும்பியுள்ளனர். அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு டெல்டா மாவட்டத்துக்குத் திரும்பிய 117 பேரை மருத்துவமனையில் அனுமதித்தும், தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் டெல்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட நபர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

கிருமி நாசினி தெளிப்பு
கிருமி நாசினி தெளிப்பு

டெல்லியில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லீக் ஜமாத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் கலந்துகொண்டனர். இதில் 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 250 பேர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலம் கொரோனா பரவியது தற்போது தெரியவந்துள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கூட்டம் முடிந்த பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகியுள்ளனர். இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களுக்குத் திரும்பிய 117 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து திரும்பியவர்கள்
டெல்லியில் இருந்து திரும்பியவர்கள்

இந்தக் குழுவில் இடம் பெற்றுத் திரும்பிச் சென்றவர்களால்தான் வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் டெல்லிக்குச் சென்று வந்தவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பரிசோதனை செய்து வருகின்றனர். திருச்சி மாநகரில் 37 பேர் சென்று வந்தனர். இவர்களைக் கண்டறிந்த போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களைத் தனிமைப்படுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் 4 பேரைக் கண்டறிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 33 பேர் டெல்லி சென்று திரும்பியுள்ளனர். அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 32 பேரை அழைத்துவந்து கரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து ரத்த மாதிரிகளைப் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா நோயாளிகள்
கொரோனா நோயாளிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதேபோல் நாகை மாவட்டத்தில் 15 பேர், அரியலூர் மாவட்டத்தில் 5 பேர், புதுச்சேரியில் 10 பேர், திருவாரூரில் 12 பேர் என 42 பேர் கண்டறியப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கலந்துகொண்ட மற்ற நபர்களைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

அடுத்த கட்டுரைக்கு