Published:Updated:

`பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுப்போம்!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

``நீலகிரியில் வாழும் பழங்குடி மக்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்றால், இந்திய அளவில் நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக அது இருக்கும்".

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்தாலும், நீலகிரி போன்ற மாவட்டங்களில் தொற்றுப் பரவல் குறையாமல் உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் மற்றும் பாஸ்டியர் தடுப்பூசி நிறுவனம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

நேற்று காலை ஊட்டி அரசு மருத்துவமனையில் உள்ள ஜீரோ டிலே சிகிச்சைப் பிரிவை ஆய்வு செய்தார். மேலும் ஊட்டி ஃபிங்கர் போஸ்ட் பகுதியில் கட்டப்பட்டுவரும் மருதுவக்கல்லூரியின் கட்டுமானப் பணியைப் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து முதுமலையில் உள்ள செம்மனத்தம் பழங்குடி கிராமத்தில் உள்ள மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``முதல்வர் அறிவுறுத்தலின்படி அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்குக் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய அனைத்துக் கிராமங்களிலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. செம்மநத்தம் கிராமத்தைப் பொறுத்தவரை 177 பேர் உள்ளதாகக் கண்டறியப்பட்டு, அதில் 18 வயது நிரம்பிய 152 பேருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 27,032 பழங்குடியின மக்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21,435 பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,129 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பழங்குடியின மக்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் 100 சதவிகிதம் தடுப்பூசி விரைவில் போடப்படும். நீலகிரியில் வாழும் பழங்குடி மக்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்றால், இந்திய அளவில் நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக அது அமையும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

இம்மாத இறுதிக்குள் பழங்குடியின மக்களுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வரக்கூடிய சூழலில், தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. தடுப்பூசிகள் வர வர அவை அனைத்துப் பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குள் நமக்கு 37 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது" என்றார் அமைச்சர்.

இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு