Election bannerElection banner
Published:Updated:

`கொரோனா பரிசோதனை; முதல்வரின் கருத்து யதார்த்தமானது’ -அமைச்சர் விஜயபாஸ்கர்

எடப்பாடி பழனிசாமி - விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமி - விஜயபாஸ்கர்

கொரோனா: சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில், தற்போது மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், நாளை நள்ளிரவு முதல் மதுரையிலும் முழு முடக்கம் அமலுக்குவருகிறது. மற்ற மாவட்டங்களிலும் நேரக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு!

இந்த நிலையில் இன்று, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பாக காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``தமிழகத்தில் ஐ.சி.எம்.ஆர் அனுமதி பெற்று 87 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. மாநிலத்தில் இதுவரை 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக நாளொன்றுக்கு 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யும் அளவை நாம் எட்டியுள்ளோம்.

இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் இருந்து அதிகம் பேர் குணமடைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. நம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வதற்கு 15 முதல் 17 நாள்கள் ஆகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து 55% பேர் குணமடைந்துள்ளனர்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்
File Photo

கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்கிறோம். தமிழக முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் தான் வந்தது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியால் வல்லுநர்களே திணறும் நிலை உள்ளது. `கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்’ என முதல்வர் யதார்த்தமாகத் தெரிவித்தார். ஆனால், இதற்கு எதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு கோபம் வருகிறது?’ என்றார்.

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,487பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,752ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் 37 ஆக அதிகரித்த நிலையில், இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 794 ஆகும். தமிழகத்தில், இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில், மதுரை மாவட்டத்தில் 157 பேருக்கும், திருவண்ணாமலையில் 139 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா தொற்றால் 623 பேர் பலியாகியுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு