Published:Updated:

பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு: "அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்!" - மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர்  பாஸ்கரன்
News
மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன்

``பழங்குடி மக்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்.'' - மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு: "அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்!" - மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

``பழங்குடி மக்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்.'' - மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

Published:Updated:
மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர்  பாஸ்கரன்
News
மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலும், தாளவாடி தாலுகாவிலுள்ள மலைகிராமங்களான கெத்தேசால், அரேபாளையம் பகுதிகளிலும் மனிதம் சட்ட உதவி மய்யம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. கோபியில் நடந்த இந்த முகாமில் சட்ட உதவி மய்யத்தின் நிறுவனரும், தி.க மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் சென்னியப்பன் வரவேற்பளித்தார். இந்திய நீதிபதிகள் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் முன்னாள் நீதிபதி பரஞ்சோதி தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் முன்னிலை வகித்தார்.

பாஸ்கரன்
பாஸ்கரன்

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன் முகாமை தொடக்கிவைத்துப் பேசுகையில், ``தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் ஆகிய இரண்டும் வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெருமையை நமக்கு கொடுத்திருக்கின்றன. நம்முடைய இயற்கை வளங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. மனித உரிமைகளைக் காப்பது போன்று இயற்கை வளங்களையும் பாதுகாக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது'' என்றார்.

தொடர்ந்து தாளவாடி தாலுகா, ஆசனூரை அடுத்த கெத்தேசால், அரேபாளையம் கிராமங்களிலும் பழங்குடி மக்களுக்கான சிறப்பு சட்ட உதவி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட எஸ்.பி சசிமோகன், மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கிருபாசங்கர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பங்கேற்ற மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ``பழங்குடிவாழ் மக்களைச் சந்தித்து அவர்களுடைய மனித உரிமைகள் தொடர்பாகவும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் பேசினேன். முகாமில் பழங்குடியின மக்களின் பொதுவான கோரிக்கையாக பட்டா மாறுதல் செய்துதருவது, இழப்பீட்டுத் தொகை பெற்று தர வேண்டும், மருத்துவ வசதி, சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் மனுக்களை அளித்தனர்.

பாஸ்கரன்
பாஸ்கரன்

மலைவாழ் பழங்குடி மக்களுக்கு அரசு இட ஒதுக்கீடு ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. இந்த மக்கள் அதிக அளவில் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு பெற முடியாமல் சிரமப்படுவதாகக் கூறினர். குறிப்பாக, இங்குள்ள பழங்குடிகளில் சிலர் ஆசிரியர் பணிக்கான படிப்பையும், பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு அரசுப் பணியை எதிர்பார்த்திருக்கின்றனர். எனவே, பழங்குடி மக்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்தனர். இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். பட்டா மாறுதல் செய்யாததால் சிட்டா, அடங்கல் பெற்று வங்கியிலிருந்து பயிர்க்கடன் பெற முடியாமல் தவிப்பதாக இங்குள்ள விவசாயிகள் கூறினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் பேசினேன். இந்தப் பிரச்னை தன்னுடைய கவனத்துக்கு வந்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் கூறியிருக்கிறார்.

சந்தன கடத்தல் வீரப்பன் உயிரோடு இருந்த வரை, கெத்தேசால் பகுதியில் அவருடைய நடமாட்டம் அதிகமாக இருந்தது. தன்னுடைய நடமாட்டத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக இந்த கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை வீரப்பன் சுட்டுக் கொன்றார். வீரப்பனின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் இந்த கிராமத்தில் தற்போது 10-ம் வகுப்பு வரை பயில்வதற்கு அரசுப் பள்ளி இருப்பதாகவும், ப்ளஸ் டூ படிக்கவும், உயர்கல்வி பயிலவும் வெளியூருக்குச் சென்று வர போதிய பேருந்து வசதியில்லாததால் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி-யுடன் தங்கள் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, கெத்தேசால் வரை பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கெத்தேசால் மக்கள் வேண்டுகோள் விடுத்து மனு அளித்தனர். இந்த மனுவை அரசுக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கும் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம்'' என்றார்.

பாஸ்கரன்
பாஸ்கரன்

இது தொடர்பாக, கெத்தேசால் கிராம மக்கள் நம்மிடம், ``முன்பு வீரப்பன் நடமாட்டம் அதிகமாக இருந்தபோது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை வீரப்பன் சுட்டுக் கொன்றான். அதன் பின்னர் இங்கு அதிரடிப்படையினர் முகாமிட்டு தங்கிக் கொண்டனர். அவர்களால் கிராம மக்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானோம். இந்த கிராமத்துக்கு எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. முக்கியச் சாலையிலிருந்து ஒன்றரை கி.மீ தூரம் தள்ளி அடர்ந்த வனப்பகுதியில் எங்கள் கிராமம் அமைந்திருப்பதால், சாலை வசதியை ஏற்படுத்தி தருமாறு பல ஆண்டுகளாகக் கேட்டுவந்தோம். மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி வருவதையொட்டியே, தற்போது தார்ச்சாலை புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல மற்ற அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்'' என கிராம மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.