Published:Updated:

`1,45,000 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்!’ - நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்?

தமிழகத்தில் 3 வருடமாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Electronic vote machine
Electronic vote machine

தமிழகத்தில் சுமார் 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே உள்ளது. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தேர்தலை நடத்த அட்டவணைகளை வெளியிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

Election
Election

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி, எஸ்டி பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கால் 2016-ம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அங்கும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்ததால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தாமதமானது.

Vikatan

தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், ‘வரும் அக்டோபர் மாதத்துக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்’ எனத் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது. இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் பேசினார்.

sathya pratha sahoo
sathya pratha sahoo

அப்போது, ‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு 1,45,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை அதன் இருப்பு மாவட்டங்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியதை அடுத்து, அனைத்து மாவட்டத்துக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN Election commission
TN Election commission

எனவே, அக்டோபர் மாதம் இறுதியில் தேர்தல் அட்டவணைகள் வெளியிடப்பட்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடக்கவுள்ளதால் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.