Published:Updated:

`ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித் தனி தளர்வு!’ - தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை

ஊரடங்கு
ஊரடங்கு

தமிழகத்தில் இருக்கும் கொரோனா நிலையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித் தனியாகத் தளர்வு விதிக்கலாம் என வல்லுநர் குழுவினர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

மத்திய அரசு பிறப்பித்திருந்த நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழகத்தின் நிலை தொடர்பாகவும் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் இன்று காலை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வல்லுநர் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள், ``தமிழகத்தில் கொரோனா பரவல் உறுதியான பிறகு, முதல்வருடன் நடக்கும் ஐந்தாவது மருத்துவ வல்லுநர் கூட்டம் இது. கொரோனோ ஒரு புது வகையான வைரஸ், அதன் நடத்தையைக் கணிக்க முடியவில்லை. இது தொடர்பாகப் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல இடங்களிலும் ஆராய்ச்சி நடக்கிறது அங்கிருந்து வைரஸ் தொடர்பாகப் புதுப்புது தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதனால் வரவுள்ள மாதம் வைரஸ் பரவல் எப்படி இருக்கும் எனக் கணிக்க முடியாது.

ஆனால் சில விஷயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து மெட்ரோ நகரங்கள் அதாவது, அதிக மக்கள் வாழும் பகுதிகளில்தான் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாசிட்டிவ் கேஸ் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் 30 மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே அதிக வைரஸ் பரவல் உள்ளது, மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. மேலும், தமிழகத்தில் இறப்பு விகிதம் மிக மிகக் குறைவாக உள்ளது.

மருத்துவ வல்லுநர் குழு
மருத்துவ வல்லுநர் குழு

தமிழகத்தின் பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகமானாலும் அதற்கேற்ப படுக்கைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வது எளிமையாக உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களைத் தடுக்க முடியாது, அவர்களால் இங்கு தொற்று எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரிக்கிறது, இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. எனவே, இங்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால் நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

யாருக்கு எந்த நிலையில் கொரோனா உள்ளது என்பதைச் சோதனை மூலமே கண்டறிய முடியும். எண்ணிக்கை அதிகரிக்க வைக்கும்போது அச்சம்கொள்ளத் தேவையில்லை. பாசிட்டிவ் எனத் தெரிந்தால் நல்லதுதான். அப்போதுதான் அவர்களைத் தனிமைப்படுத்த முடியும். கொரோனா தொடர்பாக மக்களுக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும். வீட்டைவிட்டு வெளியில் சென்றாலே கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கின் தளர்வுகள் தொடர்பாகவும் இன்று ஆலோசிக்கப்பட்டது. அதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமாக உள்ளது. எனவே, அங்கு இன்னும் அதிக கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் மொத்த தமிழ்நாட்டுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவின் நிலையை பொறுத்து அங்கு தளர்வுகளை விதிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா இறப்பு அதிகமாக உள்ளதைப் பார்த்திருப்பீர்கள். அதற்குக் காரணம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சர்க்கரை வியாதி போன்ற பிற வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போதுதான் இறப்பு ஏற்படுகிறது. எனவே, மக்கள் தங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

11 நகரங்கள் டார்கெட்; கோயில்கள் திறப்பு? - 5ம் கட்ட ஊரடங்கு தகவலும் உள்துறை அமைச்சகத்தின் விளக்கமும்

நிறைய பாசிட்டிவ் நோயாளிகளைக் கண்டுபிடித்தால் இறப்பைக் குறைத்துப் பிற மக்களைக் காப்பாற்ற முடியும். தற்போதைய சூழலில் சென்னையில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினால் மேலும் பலருக்குப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரிக்கக் கூடும். சென்னையில் சமூக பரவல் இல்லை ஒருவேளை சமூக பரவல் இருந்தால் உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கும். தமிழக முழுவதும் அப்படி எதுவும் நடக்கவில்லை அதனால் தமிழகத்திலும் சமூக பரவல் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு