Published:Updated:

`என் பேரன் மாதிரி நினைச்சு கூப்பிட்டேன்!’ - முதுமலை சர்ச்சைக்கு அமைச்சர் சீனிவாசன் விளக்கம்

அமைச்சர் சீனிவாசன்
அமைச்சர் சீனிவாசன்

முதுமலை தெப்பக்காட்டில் யானைகள் முகாமை தொடங்கிவைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவர்களை அழைத்து காலணிகளை கழற்றச் சொன்னது விமர்சனத்துக்குள்ளானது.

முதுமலை தெப்பக்காட்டில் யானைகள் முகாமைத் தொடங்கி வைக்க, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்திருந்தார். இன்று காலை 9 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சரின் வருகைக்காக வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் காத்திருந்தனர். அமைச்சர் வருவதால் முகாமுக்கு வந்த யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 9.40 மணிக்கு அமைச்சர் முகாமுக்கு வருகைதந்தார். அவரை வரவேற்ற அதிகாரிகள், அங்குள்ள கோயிலுக்கு அழைத்துவந்தனர்.

அமைச்சர் சீனிவாசன்
அமைச்சர் சீனிவாசன்

கோயில் அருகே வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு இருந்த இரண்டு சிறுவர்களை அழைத்தார். அமைச்சர் கூப்பிட்டதும் சிறுவர்கள் சற்று பயத்துடன் இருந்தனர். வனத்துறையினர், சிறுவர்களை அமைச்சர் அருகே செல்ல வைத்தனர். அமைச்சர் ஏதோ கேட்கப்போகிறார் என நினைத்திருந்த நிலையில், தன்னுடைய செருப்பின் பக்கிளை கழற்றிவிடு என சிறுவனிடம் கூறினார். சிறுவனும் பயத்துடன் கீழே அமர்ந்து, அமைச்சரின் செருப்பு பக்கிளைக் கழற்றினான்.

`இங்க வா, வந்து செருப்ப கழட்டு!'- பழங்குடியின சிறுவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சரின் வருகையையொட்டி செய்தியாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அமைச்சரின் இந்தச் செயலை அவர்கள் வீடியோவாக எடுத்தனர். அங்கிருந்த அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு, பத்திரிகையாளர்களைப் படம் எடுக்கவிடாமல் தடுத்தார். சிறுவன் பக்கிளைக் கழற்றிய பின்னர் அமைச்சர் கோயிலுக்குச் சென்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். ``முகாமைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகளுடன் சென்றோம். யானைகளுக்கு உணவு வழங்குவதற்கு முன்பாக கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றனர். அங்கு செல்லும்போது என்னுடைய `ஷூ லேஸை’ கழற்றவேண்டி இருந்தது. என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளும் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வயதானவர்களாக இருந்தார்கள். அப்போது, இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன், என்னுடைய பேரன் மாதிரி இருந்தான். `தம்பி, இந்த ஷூவைக் கழற்றிவிடு' என்றேன். இவ்வளவுதான்; இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என்னுடைய பேரனாக நினைத்துதான் அந்தப் பையனை கூப்பிட்டு கழற்றிவிட உதவி செய்யக் கூறினேன்” என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு