திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ட்விட்டரில் தமிழக பா.ஜ.க பதிவிடவே, அந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையின் கண்ணில் கறுப்பு பேப்பரை வைத்து கட்டியும் முகத்தில் சாணத்தைப் பூசியும் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்த விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது.

இந்தநிலையில், திருக்குறள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாகப் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் எழுப்பிய கேள்வியில்,``திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை எதுவும் வந்திருக்கிறதா? அப்படி வந்திருந்தால், அதுகுறித்த விவரங்கள் மற்றும் அதன்மீது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தக் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அந்தப் பதிலில், ``திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளரான ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமாரிடமிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை வந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், எந்த நூலையும் தேசிய நூலாக அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை'' என்று உள்ளது.