Published:Updated:

`ஆணியே புடுங்க வேணாம், விடுங்க!' - தடுப்பூசி சான்றிதழும் தவிக்கும் மக்களும்

கல்லூரி, பள்ளிக்கூடம், விமான பயணம், மாநிலம்விட்டு மாநில பயணம், கோயில் தரிசனம் என்று எல்லாவற்றுக்குமே சான்றிதழ் கேட்டு வற்புறுத்தப்படுகிறது. பக்கத்திலிருக்கும் டீக்கடையில்தான் இப்படி சான்றிதழ் கேட்கவில்லை எனும் அளவுக்கு, இந்த தடுப்பூசி சான்றிதழ்களைக் கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

`கொரோனா தடுப்பூசி குறைந்தபட்சம் ஒரு தவணையாவது போட்டிருக்க வேண்டும். கூடவே, 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதற்கான ஆவணங்களை (கொரோனா தடுப்பூசி சான்றிதழ்/பரிசோதனை முடிவு) கையில் வைத்திருக்க வேண்டும்.'

கல்லூரி, பள்ளிக்கூடம், விமான பயணம், மாநிலம் விட்டு மாநில பயணம், திருப்பதி மாதிரியான கோயில் தரிசனம் என்று எல்லாவற்றுக்குமே இப்படிச் சான்றிதழ் கேட்டு வற்புறுத்தப்படுகிறது. பக்கத்திலிருக்கும் டீக்கடையில்தான் இப்படிச் சான்றிதழ் கேட்கவில்லை எனும் அளவுக்கு, இந்தத் தடுப்பூசி சான்றிதழ்களைக் கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

COVID-19 vaccine (Representational Image)
COVID-19 vaccine (Representational Image)
AP Photo/Anupam Nath
தமிழக அரசின் மெகா தடுப்பூசி முகாம்: முகாம்களில் மக்களின் ரியாக்‌ஷன் என்ன?

100 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டோம் என்று பெருமிதம் கொள்ளும் அதேநேரத்தில், எத்தனை கோடி பேருக்கு முறையாக சான்றிதழ்களைக் கொடுத்து முடித்திருக்கிறார்கள் என்று பார்த்தால், நாம் சந்திக்கும் 10-ல் 5 பேர், சான்றிதழுக்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

``வெளிநாட்டுக்குப் போக டிக்கெட் போட்டாச்சு. ரெண்டு தவணை தடுப்பூசி போட்டு முடிச்சு ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. ஆனா, அதுக்கான சான்றிதழ் இன்னமும் வரல. நான் ஊசி போட்டுக்கிட்ட கோயம்பேடு அம்மா மினி கிளினிக்ல தினமும் அலைய விடறாங்க. கேட்டா, நெட்வொர்க் இல்ல, லேப்டாப் இல்லனு ஆயிரத்தெட்டு காரணம் சொல்றாங்க'' என்று வருத்தப்படுகிறார் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரவணன்.

கோயம்பேடு அம்மா கிளினிக்குக்கு நாம் காலை வேளையில் சென்றபோது, அங்கே குழுமியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் கேட்டு வந்தவர்களாகவே இருந்தார்கள்.

``நான் ரெண்டு தவணை தடுப்பூசியும் போட்டு மூணு மாசம் ஆகுது. ஆனா, எனக்கான சர்ட்டிஃபிகேட் வரல. ரேஷன் கடைக்குப் போனா, கொரோனா ஊசி சர்ட்டிஃபிகேட் கேக்கறாங்க. அது இருந்தாதான் ரேஷன் பொருள்கள் தரமுடியும்னு திருப்பி அனுப்புறாங்க. நான் ஊசி போட்ட இடத்துல போய் கேட்டா... உங்க ஆதார் நம்பர் சரியில்ல. போன் நம்பர் சரியில்லனு ஏதேதோ காரணத்தைச் சொல்லி அலைய விடுறாங்க. இதுக்கு பேசாம கொரோனாவுல போய் சேர்ந்திருக்கலாம் போல'' என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி சகுந்தலா.

மயிலாப்பூரைச் சேர்ந்த ராமசாமியின் கதை இன்னும் கொடுமை. ``எனக்கு இதய கோளாறு, சுகர் எல்லாம் இருக்கு. போனவாரம் ஜுரம் வந்துடுச்சுனு டாக்டர்கிட்ட போனேன். வாசல்ல இருக்கிற ரிசப்ஷனிஸ்ட், `கொரோனா தடுப்பூசி ரெண்டு தவணை போட்டுக்கிட்டவங்கள மட்டும்தான் டாக்டர் பார்ப்பார். அந்த சர்ட்டிஃபிகேட்டோட வந்தாதான் உள்ளே விடணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். போய் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'னு திருப்பி அனுப்பிட்டாங்க. அதுக்குப் பிறகு, எங்க ஏரியா பழைய கவுன்சிலரைப் பார்த்து அவர் மூலமா பிரஷர் கொடுத்துதான் அந்த சர்ட்டிஃபிகேட் எனக்குக் கிடைச்சது. அப்புறம்தான் டாக்டரை பார்க்க முடிஞ்சது. ஏன்தான் இப்படியெல்லாம் வயசான காலத்துல எங்கள அலையவிடறாங்களோ'' என்று கவலை பொங்குகிறார் ராமசாமி.

Covid -19 Vaccine
Covid -19 Vaccine
AP Photo

``நான் மே மாதம் முதல் டோஸ் போட்டேன். ஆகஸ்ட்டில் இரண்டாவது டோஸ் போட்டேன். ஆனால், முதல் டோஸும் பதிவாகவில்லை... இரண்டாவது டோஸும் பதிவாகவில்லை. போய்க்கேட்டால் முதல் டோஸ் போட்டதை முதல்ல பதிவு பண்ணுங்க என்கிறார்கள். அங்கே சென்றால் இரண்டாவது டோஸ் போட்ட இடத்திலேயே முதல் டோஸையும் சேர்த்துப் பதிவு செய்யுங்கள் என்று மாற்றி மாற்றி அலையவிடுகிறார்கள். இன்னும் பத்து நாள்களில் அமெரிக்காவிலிருக்கும் கல்லூரிக்கு நான் சென்றாக வேண்டும். ஆனால், சான்றிதழ் இல்லாமல் அங்கே செல்ல முடியாது. எப்படித்தான் இந்தச் சான்றிதழை வாங்குவது என்றே தெரியவில்லை'' என்று கண்ணீர் வராத குறையாகப் புலம்புகிறார் மயிலாப்பூரைச் சேர்ந்த பகவத் என்ற மாணவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் இன்னொரு கொடுமையும் இருக்கிறது. இப்படி தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை காலம் தாழ்த்தி வழங்கும்போது, சான்றிதழ் கொடுத்த தேதியைத்தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட தேதியாகக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குகிறார்கள். அதாவது, ஜூலை 30-ம் தேதியே தடுப்பூசி போட்டிருந்தாலும், அக்டோபர் 30-ம் தேதியன்றுதான் நமக்கு சான்றிதழ் தருகிறார்கள் என்றால், அக்டோபர் 30 அன்று தடுப்பூசி போடப்பட்டதாகவே சான்றிதழில் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பிரச்னையின் அடிநாதம், தடுப்பூசி போடும் பணியிலிருக்கும் சுகாதாரத்துறை பணியாளர்களில் சிலர் பொறுப்பற்றும் அக்கறையின்றியும் செயல்படுவதுதான். அதாவது, ஊசி போட்டதுமே உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்யாமல், ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்கிறார்கள். பிறகு, அதைப் பதிவு செய்யாமலேயே அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

A health worker administers the Covaxin COVID-19 vaccine
A health worker administers the Covaxin COVID-19 vaccine
Mahesh Kumar A
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பிழைகளைத் திருத்துவது எப்படி? | How to Edit Covid Vaccine Certificate?

இதைப் பற்றித் தடுப்பூசி போடும் பணியிலிருக்கும் ஊழியர்களிடம் கேட்டபோது, ``உண்மைதான் நிறைய பேருக்கு சான்றிதழ் கொடுக்காமதான் இருக்கோம். ஆனா, அது எங்க தப்பு இல்ல. உடனுக்குடன் பதிவு பண்ணணும். ஆனா, அதுக்கு ஏத்தமாதிரி லேப்டாப், இன்டர்நெட் வசதிகளை சரியா செய்து தரமாட்டேங்கறாங்க. பல இடத்துல கையில இருக்கிற ஸ்மார்ட் போன் மூலம்தான் வேலை பாக்கறாங்க. அதுலயும் நெட் வொர்க் இல்லைனா... அவ்வளவுதான்.

அப்புறம், வாரம் முழுக்க வேலை பார்க்கிறோம். இதுல வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கிற பேர்ல சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களைக்கூட அனுபவிக்கவிடாம வேலை வாங்கறாங்க. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா ஓய்வே இல்லாம ஓடிட்டே இருக்கோம்'' என்று சுகாதாரத்துறை மீது கைகாட்டுகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது, பிரதமர் மோடி சொல்லும் 100 கோடி என்பது 120 கோடியாகக் கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதாவது, முறைப்படி பதிவு செய்யப்பட்ட கணக்குதான் நூறு கோடி. ஆனால், பதிவு செய்யாத கணக்குகளையும் சேர்த்தால், 120 கோடிகூட வரலாம்தானே!

இதுதொடர்பாக சுகாதரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், ``தடுப்பூசிக்கான சான்றிதழ் சிக்கல் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதைவிட முக்கியம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான். தமிழகத்தில் 1.8 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ளவில்லை. 2-ம் தவணை தடுப்பூசியை 61 லட்சம் பேர் தவறவிட்டிருக்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் ஆபத்து. அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து" என்றவர், சான்றிதழ் தொடர்பான விபரங்களை தமிழ்நாடு தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் வினய்குமாரிடம் கேளுங்கள். அவர் விரிவாக உங்களுக்கு பதிலளிப்பார்" என்றார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இதையடுத்து தமிழ்நாடு தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் வினய்குமாரிடம் பேசினோம், நாம் சொன்ன விஷயங்களை முழுமையாகக் கேட்டுக்கொண்ட பின், `` மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கும்போது ஒரேநாளில் பல லட்சம் பேருடைய விவரங்களையும் COWIN இணையதளத்தில் பதிவு செய்ய முடிவதில்லை. அதுபோன்ற நேரங்களில்தான் நோட்டில் எழுதிக்கொண்டு பின்பு பதிவு செய்கிறார்கள். பெரும்பாலும் அதைச் சரியாகச் செய்துவிடுகிறார்கள். சில நேரங்களில், சம்பந்தப்பட்ட நபர்களின் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்கள் மாறியிருந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைக்காக உதவி மையம் ஒன்றை உருவாக்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாகத் தொடர்பு எண் வழங்கியிருக்கிறோம். அந்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் செய்தால் சான்றிதழ் தொடர்பான பிரச்னையை சரிசெய்துவிடுவார்கள்" என்றார்.

``அப்படிப் பதிவு செய்யும்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட தேதிக்குப் பதிலாகப் பதிவு செய்த தேதியில் தடுப்பூசி போட்டுக்கொண்டதுபோல் பதிவு செய்கிறார்கள். அதனால், அந்த நபருக்கான இரண்டாவது தவணை தடுப்பூசி தள்ளிப்போகிறது என்ற குற்றச்சட்டு சொல்லப்படுகிறதே?" என்று கேட்டோம், ``அப்படியான தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்காகப் பதிவு செய்பவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம். அதையும் மீறி பிரச்னை ஏற்பட்டால் உதவி மையத்துக்கு அழைக்கலாம்" என்றார்.

``ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழங்கப்பட்ட உதவி எண்கள் எண்கள் என்ன? அந்த எண்ணில் புகார் செய்ததும் அந்தப் புகார் எங்கு அனுப்பப்படும், யார் மூலம் நிவர்த்தி செய்யப்படும்?" என்று கேள்வி எழுப்பினோம். ``அதுகுறித்த முழு விபரங்களையும் எடுத்துக்கொண்டு உங்களை அழைக்கிறேன்" என்றவர் அதன்பிறகு, நம்மை அழைக்கவில்லை. நாம் பலமுறை அழைத்தும் நம் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ள உதவி எண்ணான 1913 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். வரிசையாக கொரோனாவுக்கு ஒன்றை அழுத்தவும், மருந்துக்கு மூன்றை அழுத்தவும் என்பதையெல்லாம் கேட்டு முடித்த பிறகு லைன் கிடைத்தது.

``ஹலோ... சென்னை கார்ப்பரேஷன்தானே..?''

``ஆமாங்க.''

``தடுப்பூசி போட்டு மூணு மாசம் ஆச்சு. இன்னும் சர்ட்டிஃபிகேட் வரலீங்களே?''

``நீங்க எங்க ஊசி போட்டீங்க?''

``கோயம்போடு மார்க்கெட்ல?''

``அப்படியா, உங்க மண்டல அலுவலரோட நம்பர் தர்றேன். அவருகிட்ட பேசுங்க.''

அவர் கொடுத்த 94451-90210 என்கிற எண்ணை தொடர்புகொண்டபோது,

அரசு ஊழியர்களுக்கே உரிய வழக்கமான எரிச்சலுடன் போனை எதிர்கொண்டவர்.. ``என்ன வேணும்... சர்ட்டிஃபிகேட்டா... அதுக்கு ஏன் என்ன கேக்கறீங்க. நீங்க எந்த ஏரியா?''

``கோயம்பேடு.''

``எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. இது அம்பத்தூர் மண்டலம்.''

போன் கட்டாகிவிட்டது.

மீண்டும் 1913.

Vaccination - Representational image
Vaccination - Representational image
Manish Swarup
100 கோடி கொரோனா தடுப்பூசி; இந்தியா கடந்துவந்த பாதை - ஒரு பார்வை!

``நீங்க கொடுத்த நம்பர்ல பேசினேன். ஆனா, அவர் அம்பத்தூர் மண்டலம். இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு சொல்றாரே.''

``அப்படியா. உங்களுது கோடம்பாக்கம் மண்டலம். இருங்க லேண்ட் லைன் நம்பர் தர்றேன்.''

அவர் கொடுத்த கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தின் 044-46556310 என்ற எண்ணைத் தொடர்புகொண்டபோது யாருமே எடுக்கவில்லை-நான்கு நாள்களாக முயற்சி செய்தும்.

மீண்டும் 1913.

``பேசாம ஒண்ணு பண்ணுங்க. நீங்க ஊசி போட்ட இடத்துக்குப் பக்கத்துல இருக்கற ஆரம்ப சுகதார நிலையத்துக்குப் போங்க. அங்க போய் சொன்னீங்கனா... சர்ட்டிஃபிகேட் கொடுத்துடுவாங்க.''

அதன்படியே விருகம்பாக்கத்திலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றபோது, ``நீங்க எங்க ஊசி போட்டுக்கிட்டீங்களோ அங்கதான் கேக்கணும்.''

மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருக்கும் அம்மா மினி கிளினிக் சென்றபோது... ``எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனா, ஏன்தான் அப்டேட் ஆக மாட்டேங்குதுனு தெரியல. நீங்க ஒண்ணு பண்ணுங்க. அடுத்தவாரம் வர்றீங்களா?''

`ஆணியே புடுங்க வேணாம்' என்றுதான் சொல்லத் தோன்றியது. ஆனால், ரேஷன் கடைதொடங்கி எங்கு பார்த்தாலும் தடுப்பூசி சான்றிதழ் கேட்கிறார்களே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு