Published:Updated:

கோவை, மதுரையில் அலுவலகம் - விரைவில் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தொடக்கம்?!

கோவை கார் வெடிப்பு

கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தையடுத்து மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தொடங்கப்படவிருக்கிறது, கோவை, மதுரையில் அலுவலகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கோவை, மதுரையில் அலுவலகம் - விரைவில் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தொடக்கம்?!

கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தையடுத்து மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தொடங்கப்படவிருக்கிறது, கோவை, மதுரையில் அலுவலகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
கோவை கார் வெடிப்பு

கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடந்தது. இது தொடர்பாக கோவை உக்கடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஆறு பேரைக் கைதுசெய்தனர். அதோடு கார் வெடிப்பில் பலியான முபின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு மாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார். அதன்படி இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டு, அடுத்தகட்ட விசாரணை நடந்துவருகிறது. அதில் ஒரு கட்டமாக தமிழகம் முழுவதும் நேற்று அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதானவர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள், பொருள்கள் சிக்கியுள்ளன. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்புடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருக்கும் அதிர்ச்சித் தகவலையும் என்.ஐ.ஏ தெரிவித்திருக்கிறது.

கோவை குண்டுவெடிப்புச் சம்பந்தமாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
கோவை குண்டுவெடிப்புச் சம்பந்தமாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

இந்த நிலையில், கோவை சம்பவத்துக்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகளுடனும், அரசு உயரதிகாரிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தொடங்குவது, உளவுத்துறையில் கூடுதல் போலீஸாரை நியமிப்பது, கோவையில் கூடுதலாகக் காவல் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவைத் தொடங்கும் பணிகளை தமிழக காவல்துறை தொடங்கியிருக்கிறது எனத் தகவல் வெளியானது.

இது குறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கோவை சம்பவத்துக்குப் பிறகு மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவைத் தொடங்க ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக கோவை, மதுரையில் இந்த பிரிவு தொடங்கப்படுகிறது. காவல்துறையிலுள்ள மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் ஆகிய பகுதிகள் கோவையைத் தலைமையிடமாகவும் தெற்கு, மத்திய மண்டலங்கள் மதுரையைத் தலைமையிடமாகவும் கொண்டு இந்தப் பிரிவு செயல்படவிருக்கிறது. மேலும் இந்தப் பிரிவு தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தலைமையின்கீழ் செயல்படும்.

டி.ஜி.பி அலுவலகம்
டி.ஜி.பி அலுவலகம்

கோவைக்கும் மதுரைக்கும் தனித்தனியாக எஸ்.பி அந்தஸ்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்குக் கீழ் டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்கள், காவலர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சென்னையில் தேவைப்பட்டால் ஒரு அலுவலகம் தொடங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.