Published:Updated:

பீர் பாட்டில் விளையாட்டு... பார்வையைப் பறிகொடுத்த தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி

ஐ.பி.எஸ். அதிகாரி
ஐ.பி.எஸ். அதிகாரி

விளையாட்டு வினையாகி பார்வையைப் பறிகொடுத்த கதை...

சென்னை மெரினா கடற்கரையையொட்டியுள்ள போலீஸ் தலைமையகத்தில் கோலோச்சிய உயரதிகாரி அவர். சில மாதங்களுக்கு முன்னர், நடைபெற்ற டிரான்ஸ்ஃபர் புயலில் சிக்கி உப்புச்சப்பில்லாத துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார். தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் நெருங்கிய உறவுக்காரரான இந்த உயரதிகாரி, விளையாட்டுப் புத்தியால் தனது பார்வையைப் பறிகொடுத்த சம்பவம்தான் காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பீர்
பீர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த காவல் அதிகாரிகள் சிலர், "அந்த உயரதிகாரி ரொம்ப ஜாலிப் பேர்வழி. வாரக்கடைசியில், ஈ.சி.ஆர் சாலையிலுள்ள சொகுசு பங்களாக்களில் பார்ட்டி வைப்பது அவர் வழக்கம். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாத மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை ரொம்பக் குறைவு. குடியும் கூத்துமாகப் பட்டையைக் கிளப்பும் இந்த பார்ட்டிகளில்தான், காக்கிகளின் ஈகோ யுத்தம், டிரான்ஸ்ஃபர், அரசியல் பிரமுகர்களுடன் உண்டான மனக்கசப்புகள் பேசித் தீர்க்கப்படும்.

கடந்த வாரம் இப்படி நடந்த பார்ட்டி ஒன்றில், கைகளாலேயே பீர் பாட்டிலை உடைக்கும் போட்டி நடந்துள்ளது. சில இளவட்ட அதிகாரிகள் கையிலும் காலிலும் பீர் பாட்டிலை உடைத்து கைத்தட்டலை அள்ளிச் சென்றுவிட, நமது உயரதிகாரியும் கோதாவில் குதித்துள்ளார். இளசுகளுக்குப் போட்டியாகத் தானும் ஒரு பீர் பாட்டிலை எடுத்தவர், அதை நெஞ்சில் உடைத்துக் காட்டியுள்ளார். விளையாட்டு வினையாகி, நெஞ்சில் உடைபட்ட பீர் பாட்டிலின் கண்ணாடித்துண்டு அவரது ஒரு கண் கருவிழிக்குள் பாய்ந்துவிட்டது. வலியில் துடித்தவரை உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர்.

Police Cap
Police Cap

இரண்டு நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட உயரதிகாரி வழக்கம் போல் பணிக்குத் திரும்பிவிட்டார். ஆனால், நான்கு நாள்கள் கழித்து அவரின் விழியோரத்தில் ரத்தம் கசிந்துள்ளது. கண்ணில் வலி அதிகமாகவே, நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் குடும்பத்தார் சேர்த்துள்ளனர். கண்ணில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், காயமடைந்த கண்ணை அகற்றவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு அதிகாரியின் இடது கண் அகற்றப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்து செயற்கைக் கண் கொண்டுவரப்படுகிறது. அது பொருத்தப்பட்டவுடன் வழக்கம்போல் பணிக்குத் திரும்பவுள்ளார். அவர் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது துரதிர்ஷ்டம்தான்" என்றனர். ஆனால், ஒரு கண் பறிபோனதால் அவரின் பணிக்கு ஏதும் பாதிப்பில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிறந்தநாள் பார்ட்டி; வகுப்பறைக்குள் பீர் பாட்டில்கள்!- ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை

எப்போதும் முகத்தில் அரைகிலோ பவுடரை போட்டுக்கொண்டு, ஃபுல் மேக்கப்போடு வலம் வந்த அந்த உயரதிகாரி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பல காவல்துறை படங்களுக்கு ரோல் மாடலாக விளங்கியவர். பார்வை பறிபோனதற்கு பீர்பாட்டில் விளையாட்டுதான் காரணம் என மற்றவர்களுக்குத் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் எனக் கவலைப்படுகிறாராம். இதற்காக, பேட்மிட்டன் விளையாடும்போது ராக்கெட் பந்து பட்டு காயமடைந்துவிட்டதாகக் கூறி வருகிறாராம். பழகுவதற்கு நல்ல மனிதர் என்பதால், விளையாட்டு வினையாகிவிட்டதில் காவல்துறை அதிகாரிகள் பலரும் கலங்கி நிற்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு