Published:Updated:

`அழுகையோடு பேசிய மகள்; ஆறுதல் சொன்ன கைதி!' - நெகிழவைத்த சிறைத்துறையின் 7 கட்டளைகள் #corona

வீடியோ காலில் பேசும் கைதி
வீடியோ காலில் பேசும் கைதி

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடியோ காலில் உறவினர்களிடம் பேச கைதிகளுக்குச் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் கொரோனாவால் பாதிக்கப்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறையிலிருக்கும் சில கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 9 மத்தியச் சிறைகள் உள்ளன. அதில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

`நான்தான் கொரோனா..!'- வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டரின் `திகில்' விழிப்புணர்வு
வீடியோ காலில் பேசும் கைதி
வீடியோ காலில் பேசும் கைதி
நான் நலமாக இருக்கிறேன். நீ கவனமாக இரு, வெளியில் எங்கும் போகக்கூடாது, சுடு தண்ணீர் குடிக்கணும், அழக்கூடாது.
கைதி

அதோடு சிறைக் கைதிகளைச் சந்திக்கவும் கடந்த 24-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. அதனால் சிறையில் இருக்கும் கைதிகள் தவித்தனர். இதையடுத்து கைதிகளுக்கு சிறைத்துறை நிர்வாகம் புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிறையில் உள்ள கைதிகள், தங்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறைக் கைதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வீடியோ காலில் பேசும் சிறைக் கைதிகள், சிறை அதிகாரிகளின் முன்னிலையில்தான் பேச வேண்டும், 5 நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்கக்கூடாது போன்ற 7 கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``9 மத்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், ஒவ்வொரும் தங்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி முதல்முறையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ கால் வசதியைக் கொண்ட 58 செல்போன்கள் வாங்கப்பட்டு ஒவ்வொரு சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

கைதிகள், குடும்பத்தினருடன் எப்படிப் பேச வேண்டும் என்பது தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு 7 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில், 1. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களில் வீடியோ கால் மூலம் உறவினர்களிடம் கைதிகள் பேசலாம். 2. புதிய சிறைக் கைதிகளிடமிருந்து 3 செல்போன் எண்களைப் பெறலாம். 3. சிறைக் கைதிகள் தங்கள் உறவினர்களிடம் 5 நிமிடங்கள் வீடியோ காலில் பேசலாம். தேவைப்பட்டால் கூடுதலாக 2 நிமிடங்கள் அனுமதிக்கலாம்.

`குமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்றுபேர் ஒரே நாளில் பலி’ -என்ன காரணம்?
வீடியோ காலில் மகிழ்ச்சியோடு பேசும் கைதி
வீடியோ காலில் மகிழ்ச்சியோடு பேசும் கைதி

4. வீடியோ கால்களுக்குக் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

5. செல்போனில் கிருமி தொற்று இருக்கக்கூடாது.

6. கைதிகளோ, சிறைத் துறை காவலர்களோ முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. கைதிகள் எந்த எண்ணில் பேசினார்கள். யாருடன் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில்தான் கைதிகளை குடும்பத்தினருடன் பேச அனுமதி அளித்துவருகிறோம்" என்றனர்.

சிறைக் கைதி ஒருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், `அப்பா எப்படி இருக்கீங்க, உடம்பை பத்திரமாகப் பாத்துக்கோங்க' என்று கைதியின் மகள் பேசுகிறார். அதற்கு கைதி, `நான் நலமாக இருக்கிறேன்' என்று பதிலளிக்கிறார். `அப்பா நீங்கள் சாப்பிட்டீங்களா?' என்று மகள் கேட்கிறார். அதற்கு கைதி, `நான் சாப்பிட்டுவிட்டேன். சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க, பயப்படாதீங்க, தைரியமாக இருங்க' என்கிறார்.

புழல் சிறை
புழல் சிறை

பின்னர் தன்னுடைய இன்னொரு மகளின் பெயரைச் சொல்லி அவரிடம் கைதி பேசுகிறார். அந்த மகள் அழுதபடியே, `அப்பா எப்படியிருக்கீங்க?' என்று கேட்கிறார். அதற்கு, `நான் நலமாக இருக்கிறேன். நீ கவனமாக இரு, வெளியில் எங்கும் போகக்கூடாது, சுடுதண்ணீர் குடிக்கணும், அழக்கூடாது' என்கிறார். அடுத்து, `அம்மா என்ன செய்கிறார்?' என்று கைதி கேட்கிறார். மனைவியிடம், `அங்கு எந்தப் பிரச்னையும் இல்லையே' என்று கைதி கேட்கிறார். அதற்கு அவரின் மனைவி, `ஒன்றுமில்லை' என்று பதிலளிக்கிறார். `சிறையில் வீடியோ கால் பேச வசதி செய்து கொடுத்துள்ளார்கள், சீக்கிரமாக வந்துவிடுகிறேன்' என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

சிறையிலிருக்கும் கைதிகள் மகிழ்ச்சியோடு அவர்களின் குடும்பத்தினரோடு வீடியோ காலில் பேசினர். இந்த நிகழ்வு கைதிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளித்தது.

அடுத்த கட்டுரைக்கு