Published:Updated:

`அவர்கள் பிரச்னைகளை சிறு வயதிலிருந்து பார்க்கிறேன்!' - பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினராகும் லீலாவதி

``பள்ளிக்கூட வசதியில்லாத எங்கள் மலை கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கிச் சென்று என்னைப் படிக்க வைத்தார் என் தந்தை. அதன் பின்பு விடுதியில் தங்கியிருந்து உயர் கல்வி முடித்தேன்.'' - லீலாவதி

``நாடு முழுவதுமுள்ள பழங்குடியின மக்களின் மொழி, கலாசாரம், உணவுப்பழக்கம் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் ஒரே விதம்தான்" என்கிறார் லீலாவதி தனராஜ்.

லீலாவதி - தனராஜ்
லீலாவதி - தனராஜ்
கோரிக்கையை மதிக்காத அரசு; வன உரிமைச் சட்டத்தின் மூலம் காட்டில் குடியேறிய பழங்குடி மக்கள்!

தமிழக அரசின் ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவராக முன்னாள் நீதிபதி சிவக்குமார், பத்திரிகை ஆசிரியர் புனிதப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உறுப்பினர்களுள் ஒருவராக லீலாவதி நியமிக்கப்பட்டுள்ளது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் குடகு மலை கிராமத்தில் பிறந்த லீலாவதி, சிறு வயதிலிருந்து பழங்குடி மற்றும் பட்டியல் சமூக மக்களின் கஷ்டங்களையும், அவர்களின் தேவை என்னவென்பதையும் நன்கு அறிந்தவர். சமூகவியலில் முதுகலைப் பட்டம் படித்துள்ளவர், பாதிக்கப்படும் பழங்குடி மக்களுக்காகத் தொடர்ந்துபோராடி வருகிறார். பழங்குடி குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபட்டு வருகிறார்.

மலைவாழ் மக்களுடன்
மலைவாழ் மக்களுடன்

லீலாவதியின் கணவர் தனராஜ், பழங்குடியின மக்களுக்காகச் செயல்பட்டு வரும் `ஏக்தா பரிஷத்'தின் தமிழக நிர்வாகி. ஆரம்பத்தில் மதுரையிலிருந்து செயல்பட்டு வந்த தனராஜ் - லீலாவதி தம்பதி, தற்போது பொள்ளாச்சியில் வசிக்கிறார்கள். அங்குள்ள பழங்குடி மக்களுக்கு, அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைக் களைய உதவி வருகிறார்கள்.

லீலாவதி தனராஜிடம் பேசினோம். ``ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நான் குடகில் பிறந்தாலும் நாடு முழுவதுமுள்ள ஆதிவாசி மக்களின் பிரச்னை என்னவென்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதிவாசி மக்களின் மொழி, கலாசாரம், உணவுப் பழக்கம் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் ஒரே விதம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடும் உழைப்பாளிகளான என் பெற்றோர் படிக்கவில்லை என்றாலும் என்னை நன்றாகப் படிக்க வைத்தார்கள். எங்கள் மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டுமென்று விரும்பினார்கள். பழங்குடியின மக்களும், தலித் மக்களும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என்று என் தந்தை பாடுபட்டார்.

பள்ளிக்கூட வசதியில்லாத எங்கள் மலை கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கிச் சென்று என்னைப் படிக்க வைத்தார் என் தந்தை. அதன் பின்பு விடுதியில் தங்கியிருந்து உயர் கல்வி முடித்தேன்.

பழங்குடி குழந்தைகளுக்கு பயிற்ச்சி
பழங்குடி குழந்தைகளுக்கு பயிற்ச்சி

தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல வாழ்க்கை அமைய பழங்குடி மக்கள் எந்தளவுக்கு கவலைப்படுகிறார்கள், அதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை சிறு வயது முதல் பார்த்து வருகிறேன்.

நான் என் பெற்றோருக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தேன். இன்று நாடு முழுவதும் சென்று பல மாநிலங்களில் பாதிக்கப்படும் பழங்குடி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் என் தந்தை.

அதுபோல் நானும் என் கணவருடன் சேர்ந்து தமிழகத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகப் போராடி வருகிறேன். அவர்களின் நலன் சார்ந்து இயங்குகிறேன். அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். இந்த நிலையில், பழங்குடி மக்களின் தேவைகளை வலியுறுத்திச் சொல்லி, அவற்றை நிறைவேற்றும் வாய்ப்பாக, தமிழக அரசின் ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் என் உறுப்பினர் நியமனத்தைப் பார்க்கிறேன். இதில் சிறப்பாகச் செயல்படுவேன்" என்றார்.

மலைவாழ் மக்களுடன்
மலைவாழ் மக்களுடன்
`20 வருடங்களுக்குப் பிறகு மின் இணைப்பு' - மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக அம்மக்களுடன் சேர்ந்து தொடர்ந்து போராடி வரும் கணவர் தனராஜுடன் லீலாவதியும் பயணித்து வரும் நிலையில், பழங்குடி மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அவரை தமிழக அரசு நியமித்துள்ளதை சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்று வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு