Published:Updated:

`6 கட்டுப்பாடுகள்; பார்களுக்கு அனுமதியில்லை!’- தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவு

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு இன்று முதல் 17ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு கட்ட ஊரடங்குகளை ஒப்பிடுகையில் தற்போது சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் 40 நாள்களுக்குப் பின்னர் மதுபானக் கடைகள் இன்று காலை திறக்கப்பட்டன. இதனால், மதுபானங்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. மேலும், பல இடங்களிலும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டு கூட்டம் அலைமோதியது. தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையோர மதுபானக் கடைகளுக்குத் தமிழகத்திலிருந்து மக்கள் சென்று மதுபானம் வாங்கத் தொடங்கினர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இந்தநிலையில், தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,``கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும், மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுக்கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும், நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கட்டுப்பாடுகள்

1.மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

3. மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

4. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

5. அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

6. ஒவ்வொரு மதுபானக் கடையிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களைப் பணியமர்த்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதியில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு