Published:Updated:

`முகத்துல ஊதச் சொல்லவே பயமா இருக்கு..!' -கொரோனா அச்சத்தால் குமுறும் போக்குவரத்துக் காவலர்கள்

வாகனத் தணிக்கை
வாகனத் தணிக்கை

``கொரோனாவின் தீவிரம் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வரின் கொரோனா முன்னெச்சரிக்கை உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய நிலையும் உள்ளது“

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் போக்குவரத்து வாகன தணிக்கையின்போது தங்களுக்குத் தேவையான உபகரணங்களை அளிக்க வேண்டும் எனக் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் எவ்வளவு காலத்துக்குத்தான் அவர்களை முகத்தில் ஊதச் சொல்ல முடியும் எனக் காவலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வாகன விபத்து ஒன்றை விசாரணை செய்த நீதிபதிகள், ``மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களைப் பறிமுதல் செய்வது, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது எனக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் விவரங்களைக் கொடுக்க வேண்டும்” எனக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அவர்களை சிறையில் அடைத்து வருகிறார்கள். அதேவேளையில் கொரோனாவின் தீவிரம் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வரின் கொரோனா முன்னெச்சரிக்கை உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் வாகன சோதனை செய்யும் காவலர்கள் பணிப்பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்வதாகக் குமுறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு - நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை #Corona #NowAtVikatan

இதுகுறித்துக் காவல் துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பிலிருந்து மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார்கள்.

வாகன தணிக்கை
வாகன தணிக்கை

வாகன சோதனையின்போது ஆவணங்களைச் சரிபார்க்கிறோம். அப்போது வாகன தணிக்கை செய்யும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முகக் கவசம் மட்டுமே எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கையுறையும் கொடுக்க வேண்டும். அதுபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைச் சோதனை செய்ய அதற்கான சாதனங்களைத் தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

ஒருவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யும்போது, ஆல்கஹால் அளவு 40-க்கு குறைவாக இருக்க வேண்டும். 40 அல்லது அதற்கு மேல் ஆல்கஹால் அளவு இருந்தால்தான் சம்பந்தப்பட்ட நபர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்ய முடியும். வாகன ஓட்டி மதுபோதையில் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய அவரை முகத்தில் ஊதச் சொல்கிறோம். அப்போது மது வாடை வந்தால் மட்டுமே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ரத்தப் பரிசோதனை செய்கிறோம்.

போக்குவரத்து தணிக்கையில் காவலர்கள்
போக்குவரத்து தணிக்கையில் காவலர்கள்

இதற்கான உரிய உபகரணங்கள் இருந்தால் வாகன தணிக்கையின்போது சந்தேகிக்கப்படும் நபரை முகத்தில் ஊதச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. கொரோனா குறித்த பயமும் இருக்காது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு