Published:Updated:

`மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணம்' -அரசு டிரைவிங் ஆய்வாளரின் நேர்மையால் நெகிழ்ந்த தம்பதி

பணத்தை பெறும் தம்பதி
பணத்தை பெறும் தம்பதி ( ம.அரவிந்த் )

இருசக்கர வாகனத்தின்மீது கறுப்பு பேக் ஒன்று நீண்டநேரமாக இருப்பதைக் கவனித்த அவர், அதை எடுத்துப் பார்த்தபோது, அதனுள் 3 லட்ச ரூபாய் வரை பணம் இருந்துள்ளது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் தவறவிட்டுச் சென்ற 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துடன், அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, நேர்மையாக நடந்து கொண்ட அரசு போக்குவரத்து ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பணத்தைக் கொடுக்கும் துரைசாமி
பணத்தைக் கொடுக்கும் துரைசாமி

தஞ்சாவூரில், அரசுப் பேருந்து டிரைவராக இருந்து பதவி உயர்வு பெற்று, டிரைவிங் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவருபவர் துரைசாமி. தற்போது, புதிய பேருந்து நிலையத்தில் பணியிலிருக்கும் இவர், அரசுப் பேருந்து ஓட்டுநர்களிடம் மாஸ்க் அணிவிக்கச் சொல்வது, அடிக்கடி கைகளை சானிடைஸர் பயன்படுத்தி சுத்தம் செய்யச் சொல்வது உள்ளிட்ட செயல்களைச் செய்துவருகிறார்.

இந்த நிலையில், தஞ்சை பேருந்து நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பேருந்துகள் நிற்கக்கூடிய இடத்தில் வழக்கம்போல் பணி செய்துகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது கறுப்பு பேக் ஒன்று நீண்டநேரமாக இருப்பதைக் கவனித்த அவர், அதை எடுத்துப் பார்த்தபோது, அதனுள் 3 லட்ச ரூபாய் வரை பணம் இருந்துள்ளது. அத்துடன் ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்டவையும் இருந்துள்ளன. உடனே, உயர் அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

`கொரோனா கத்துக்கொடுத்த பாடம்... இயற்கை விவசாயம் செய்யப்போறேன்!' - நடிகர் செந்தில்

அவர்கள் வந்த பிறகு கேட்பாரற்றுக் கிடந்த பையில் பணம் இருந்த விபரத்தைக் கூறி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். துரைசாமியின் நேர்மையை பார்த்து வியந்ததுடன் நெகிழ்ச்சியுடன் பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணத்தை தவறவிட்டவர்கள் வந்துவிடவே, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்படைத்தனர்.

துரைசாமியிடம் பேசினோம். `` அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல்சமது -பைரோஜா பேகம் தம்பதியர், தங்களது ஊரிலிருந்து திருச்சி செல்வதற்காகப் பேருந்துமூலம் தஞ்சை வந்து இறங்கியுள்ளனர். அத்துடன், அருகிலிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்துள்ளனர். அப்போது பைரோஜா பேகம், தன் கையிலிருந்த பேகை இரண்டு சக்கர வாகனத்தின் மேல் வைத்துள்ளார். அதன்பிறகு பையை எடுக்க மறந்துவிட்டு, திருச்சி பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டனர். அதில், 3 லட்சத்து ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.

தம்பதி
தம்பதி

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வரை சென்ற பிறகே பேகை எடுக்கவில்லை என்பதையறிந்து பதறியிருக்கிறார்கள். அதன்பிறகு பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோ ஒன்றைப் பிடித்து அலறியடித்து வந்தனர். அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களிடம் உரிய விளக்கம் கேட்டதுடன், பையில் இருந்த ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, பணத்தை அந்தத் தம்பதியரிடம் ஒப்படைத்தனர். அந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம் ஏற்பட்டது.

அப்போது என் கைகளைப் பற்றிக்கொண்ட அப்துல்சமது, ` எங்க பையனுக்கு பீஸ் கட்டுவதற்காக எடுத்துச்சென்ற பணம். இந்தப் பணம் மீண்டும் எங்க கைக்கு கிடைக்குமா எனக் கவலையுடன் வந்தோம். உங்கள் நேர்மையால் எங்க பணம் எங்க கைக்கு வந்துவிட்டது. இதன்மூலம், எங்க பையனோட படிப்புக்கும் உதவியிருக்கிறீர்கள்' என உற்சாகப்பட்டனர்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு