Published:Updated:

`அதட்டிச் சொன்னா கேட்கமாட்டாங்க!’ - குடிமகன்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த வி.ஏ.ஓ

தினமும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்ற பிறகு, கும்பல் கும்பலாக உட்கார்ந்து மது குடிப்பதைச் சிலர் வாடிக்கையாக வைத்திருந்தனர். மது குடித்து முடித்த பிறகு, அதன் குப்பைகளை அப்படியே விட்டுச் சென்றுவிடுவார்கள். இதைத் தடுக்கச் சொல்லி ஊர் மக்களிடம் தெரிவித்தேன்.

அறிவிப்பு போஸ்டர்
அறிவிப்பு போஸ்டர்

தஞ்சாவூர் அருகே வி.ஏ.ஓ அலுவலகத்தில் அமர்ந்து குடிமகன்கள் சிலர் மது குடித்துவிட்டு அதன் பாட்டில் மற்றும் குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதையடுத்து அங்கு பணிபுரியும் வி.ஏ.ஓ இதைத் தடுக்கும் விதமாக அன்பு வேண்டுகோள் அடங்கிய வாசகங்களை எழுதி அறிவிப்பு பலகை ஒன்றை வைத்தார். தற்போது மது குடிப்பதும் குறைந்துவிட்டதால் பொதுமக்கள் பலரும் வி.ஏ.ஓ-வை பாராட்டி வருகின்றனர்.

அருண் பிரசாத்
அருண் பிரசாத்

தஞ்சாவூர் அருகே உள்ள திருக்காட்டுபள்ளி அகரப்பேட்டை கிராமத்தில் வி.ஏ.ஓ-வாகப் பணிபுரிந்து வருகிறார் அருண் பிரசாத். திருச்சி வேங்கூர் பகுதியைச் சேர்ந்த இவர் 2014-ல் வி.ஏ.ஓ-வாகப் பொறுப்பேற்று இந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அகரப்பேட்டையில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகத்தி பணி முடிந்து பூட்டிவிட்டுச் சென்ற பிறகு, குடிமகன்கள் பலர் இங்கு வந்து மது குடித்துவிட்டு பாட்டில் மற்றும் குப்பைகளை அலுவலகத்தின் முன் பகுதியிலேயே போட்டுச் செல்கின்றனர்.

அருண்பிரசாத் காலை அலுவலகத்தைத் திறக்க வரும்போது முன்பகுதியில் மது பாட்டில்களும், கப் உள்ளிட்ட குப்பைகளும் அங்காங்கே இறைந்து கிடக்கும். இதனால் ஒருவித துர்நாற்றம் வீசும் அத்துடன் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பலரும் இதைக் கண்டு முகம் சுளிப்பார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததையடுத்து குடிகாரர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து இனி இங்கு மது குடிக்காதீர்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக வாசகங்கள் எழுதி ஒட்டி வைத்தார். இதைப் பார்த்த குடிமகன்கள் தற்போது வி.ஏ.ஓ அலுவலகத்தில் மது குடிப்பது இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வி.ஏ.ஓ அலுவலகம்
வி.ஏ.ஓ அலுவலகம்

இதுகுறித்து வி.ஏ.ஓ அருண் பிரசாத்திடம் பேசினோம், ``தினமும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்ற பிறகு கும்பல் கும்பலாக உட்கார்ந்து மது குடிப்பதை சிலர் வாடிக்கையாக வைத்திருந்தனர். மது குடித்து முடித்த பிறகு, அதன் குப்பைகளை அப்படியே விட்டுச் சென்றுவிடுவார்கள். இதைத் தடுக்கச் சொல்லி ஊர் மக்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சொல்லியும் மது குடிப்பவர்கள் கேட்பதாக இல்லை. இதனால் அலுவலகம் முன்பு மூங்கில் கம்புகளைக் கொண்டு தட்டி அடித்து வைத்து அடைத்தேன். அதன் பிறகு தட்டிக்கு முன்பகுதியில் அமர்ந்து குடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இதனால் அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் முகம் சுளிக்கத் தொடங்கினர். இதைத் தடுப்பதற்கு ஒரு யோசனை வந்தது. அதட்டிச் சொன்னாதான் கேட்க மாட்டார்கள் அன்பாக ஒரு வேண்டுகோளை வைப்போம் என்று குடிப்பதைத் தடுக்கும் விதமாக வாசகங்கள் எழுதி அதை மூங்கில் தட்டியில் ஒட்டி வைத்தேன். அதில் கிராம நிர்வாக அலுவலகம் என்பது மக்களுக்கானது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

அறிவிப்பு
அறிவிப்பு

இங்கு மது அருந்துவதும் பாட்டில்களை விட்டுச் செல்வதும் நாகரிகமற்றது. இது போன்ற தவற்றைச் செய்யும் சிலர் இனி இந்த நிகழ்வு நடக்கா வண்ணம் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் சுய ஒழுக்கமே நற்சமுதாயத்தின் வேர் என அன்பு வேண்டுகோள் விடுக்கும் விதமாக வாசகங்கள் எழுதி அதை ஒட்டி வைத்தேன். அதைப் படித்த குடிமகன்கள் இங்கு வந்து மது அருந்துவதைக் குறைத்துவிட்டனர். சீக்கிரமே முற்றிலுமாக இல்லாமல் போகும் இப்பதான் எனக்கும், இங்கு வரும் மக்களுக்கும் நிம்மதியாக இருக்கிறது” என்றார்.