Published:Updated:

`எம்.ஜி.ஆர்-தான் எங்களின் கடவுள்!’ - 40 ஆண்டு நினைவுகளைப் பகிர்ந்த பெண் போலீஸார்

ஓய்வுபெற்ற பெண் போலீஸார்
ஓய்வுபெற்ற பெண் போலீஸார்

வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப் பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் பயிற்சிபெற்ற தமிழகத்தின் முதல் பெண் காவலர்கள் நேரில் சந்தித்து அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

தமிழகத்தில், முதல் முறையாக 1981-ம் ஆண்டுதான் பெண் காவலர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு 806 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வேலூர் கோட்டையிலுள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில், 1981-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 6 மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவுக்கு வந்திருந்த அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பெண் காவலர்களின் திறமைகளைப் பார்த்து வியந்துபோனார்.

வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை

650 பேருக்கு கிரேடு-1 பதவியும் 78 பேரைக் காவல் உதவி ஆய்வாளராகவும் 78 பேரை தலைமைக் காவலர்களாகவும் நியமிக்க உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். அதன்படி, அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களில் சிலர் முதல் நிலை காவலரிலிருந்து படிப்படியாக துணைக் கண்காணிப்பாளர் வரை பதவி உயர்வுபெற்று ஓய்வு பெற்றனர். இன்னும் சிலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் காவலர்கள் சிலர், `வாட்ஸ் அப்’ மூலம் தங்களுடன் பயிற்சி பெற்ற அனைத்துப் பெண் காவலர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி தொடங்கிய பிப்ரவரி 23-ம் தேதி சந்திக்க முடிவுசெய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற டி.எஸ்.பி டோமினிக் சேவியர் செய்தார்.

நினைவுப் பரிசு வழங்கிய டி.ஐ.ஜி காமினி
நினைவுப் பரிசு வழங்கிய டி.ஐ.ஜி காமினி

திட்டமிட்டபடி, வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப் பள்ளியில் இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 160-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பெண் காவலர்கள் வந்தனர். இந்தச் சந்திப்பின்போது, பணியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் மலரும் நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அடி, உதை கொடுத்து மன்னிப்பு கேட்கவைத்த பெண் போலீஸ்! - பெண்களைக் கேலி செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், ``தமிழகத்தில் முதன்முதலாகத் தேர்வுசெய்யப்பட்ட பெண் காவலர்களில் 90 சதவிகிதம் பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். மீதமுள்ளவர்களும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளனர். ஆனால், காவலர்களின் கடமையும் காவல் துறையும் எப்போதும் நம்மை ஒருங்கிணைக்கும்" என்றார்.

ஓய்வுபெற்ற பெண் போலீஸார்
ஓய்வுபெற்ற பெண் போலீஸார்

தொடர்ந்து பேசிய பலர், ``எம்.ஜி.ஆர்-தான் எங்களுக்குக் கடவுள்’’ என்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். பின்னர், தங்களுடன் பணியில் சேர்ந்து மரணமடைந்த போலீஸாருக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு அனைவரும் வேலூரை அடுத்துள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு