Published:Updated:

ஊரடங்கு : மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்... மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஊரடங்கு காரணமாகத் தவிக்கும் தமிழக இளைஞர்கள்
ஊரடங்கு காரணமாகத் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

`ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவு மட்டுமே கொடுக்கிறார்கள். அதுவும் ஏதோ தர வேண்டும் என்ற நோக்கில் கல், உமி உள்ள சாதத்தைத் தருகிறார்கள்.’

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதையடுத்து, வெளிமாநிலங்களில் வேலைக்குச் சென்ற தமிழகத் தொழிலாளர்கள் ஆங்காங்கே தவித்து வரும் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவில் வேலை பார்த்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 43 இளைஞர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமலும் அங்கு போதிய உணவு, இருப்பிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 43 பட்டதாரி இளைஞர்கள், மகாராஷ்டிராவில் கராட் என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர்களாகக் கடந்த ஆறு மாதமாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். அதே பகுதியில் வீடெடுத்து வசித்து வந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல், அதனைத் தொடர்ந்து அரசின் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் திடீரென வற்புறுத்த, வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். பிறகு, தமிழகத்துக்கு வர முயன்ற அவர்களை அம்மாநில அரசு சிறு மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருக்கிறது. ஆனால், அங்கு அவர்களுக்கு சரியாக உணவளிக்காமல், மருத்துவப் பரிசோதனை செய்யாமல் வாடுவதாக சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கின்றனர். தமிழக அரசு எங்களை எப்படியாவது மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக இளைஞர்கள்
தமிழக இளைஞர்கள்

மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்து வரும் இளைஞர்களில் ஒருவரான, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி பேசும்போது ''கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து 15 இளைஞர்களும் மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் இருந்தும் என மொத்தம் 43 இளைஞர்கள் கராட் பகுதியில் உள்ள கேல்வே என்ற தனியார் கம்பெனிக்கு வேலைக்கு வந்தோம். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் கடந்த 30-ம் தேதி நாங்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்து எங்களைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் மிரட்டினார்கள். போக்குவரத்து வசதியும் இல்லாததால் நாங்கள் ரூம்களைக் காலி செய்துவிட்டு சாங்கி என்ற இடம் வரை நடந்தே வந்தோம்.

நாங்கள் நடந்து வருகையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எங்களைத் தாக்கினார்கள். நடந்து வந்த எங்களை போலீஸ் தடியடி நடத்தி, அஸ்தா என்ற இடத்தில் சிறு மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். எங்களுடன் இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த இன்னும் சிலரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் 50, 60 வயதுடையவர்கள். இந்நிலையில் இங்கு தங்கியுள்ள சுமார் 70 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு நோய்த்தொற்று இருக்குமோ என்ற அச்சம் உள்ளதால் போலீஸிடம் எங்களைப் பரிசோதனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தால் அடித்துத் துன்புறுத்துகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கோரிக்கை விடுத்தும், அவருக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும் செய்யவில்லை. ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவு மட்டுமே கொடுக்கிறார்கள். அதுவும் ஏதோ தர வேண்டும் என்ற நோக்கில் கல், உமி உள்ள சாதத்தைத் தருகிறார்கள். இங்குள்ள 70 பேருக்கும் இரண்டே கழிப்பறைதான் இருக்கிறது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் வாந்தி, வயிற்றுப்போக்கால் தினம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இங்கு எங்களைத் தங்க வைத்த முதல் நாளில், குறைவான தரத்தில் முகக் கவசம் ஒன்றை ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தனர். 9 நாள்கள் கடந்த நிலையிலும் அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம். முகக் கவசத்தைத் தவிர வேறு எந்த அடிப்படை வசதியும் எங்களுக்குச் செய்து தரப்படவில்லை. சிலர் உணவு பொட்டலங்களுடன் வந்து எங்களுடன் சேர்ந்து போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களைத் தராமலேயே கொண்டு செல்கிறார்கள். இந்த நிகழ்வு அடிக்கடி அரங்கேறி வருவதால் எங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது.

இளைஞர்கள்
இளைஞர்கள்

மகாராஷ்டிராவில் நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருவதால் ஊரடங்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இங்கு நாங்கள் தினந்தோறும் சித்திரவதை அனுபவித்து வருகிறோம். தமிழக அரசு எங்களை உடனடியாக மீட்டு தமிழகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எங்கள் வீட்டுக்குக்கூட அனுமதிக்க வேண்டாம். நாங்கள் தனித்து இருக்குமாறு ஏற்பாடு செய்து தந்தால் போதும். இதுவரை எங்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை. எனவே, மருத்துவப் பரிசோதனை செய்து எங்கள் அச்சத்தை போக்க வேண்டும்” என்கிறார் வேதனை கலந்த குரலில்.

கடந்த 9 நாள்களாகப் போதிய உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் தமிழக இளைஞர்களை உடனடியாக மீட்குமா தமிழக அரசு..?

அடுத்த கட்டுரைக்கு