`டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்விலும் அதே முறைகேடு!' -அரசு வேலையை இழக்கப்போகும் அதிகாரிகள்?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு போலவே குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள், தரவரிசைப் பட்டியலில் முதல் 39 இடங்களைப் பிடித்திருந்தனர். இதைக் கவனித்த சக தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரைப் பகுதியில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, மொத்தமாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி மற்றும் அரசுத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு உதவிய இடைத்தரகர்கள் குறித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. குரூப் 4 விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றபோது குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
2017-18-ம் ஆண்டுக்கான குரூப் 2ஏ தேர்வு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. அதில் 4,62,697 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 36 நாள்களில் முடிக்கப்பட்டு, டிசம்பர் 17-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, 2019 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு விதிமுறைகளின்படி பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது அந்தந்தத் துறைகளில் சேர்ந்து பணி செய்து வருகின்றனர்.

2018-ம் ஆண்டு குரூப் - 2ஏ தேர்வு எழுதியவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் பலரும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களே என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர்களில் பலரும் தரவரிசைப் பட்டியலில் முதல் சில இடங்களைப் பிடித்ததும் கண்டறியப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவில்லை. அதனால் முறைகேடு செய்தவர்களை எளிதாகத் தகுதிநீக்கம் செய்துவிட்டு தகுதியானவர்களுக்குப் பணி நியமனம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், குரூப் 2ஏ தேர்வைப் பொறுத்தவரை அவர்கள் வேலையில் சேர்ந்துவிட்டனர். இந்தநிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதியைப் பெறுவதற்கான வேலைகளில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். `குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என்கின்றனர் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுவது, மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `வரும் காலங்களில் தேர்வு எழுதுபவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்' என்கின்றனர் தேர்வர்கள்.